* அமைச்சர் அமீர் அலி
தன்னிடம் ஆயுதக் குழுக்கள் இருப்பதை நிரூபித்தால் அமைச்சுப் பதவியை துறக்கத்தயாரென ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜயசேனவுக்கு அமைச்சர் அமீர் அலி சவால் விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற அவசர காலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் அமீர் அலி மேலும் கூறியதாவது;
முன்னர் ஒரு காலத்தில் கிழக்கிலுள்ள தமிழரின் பகுதிக்கு முஸ்லிம் ஒருவர் சென்று திரும்பிவராவிட்டால் அவர் அங்குள்ள தமிழர் ஒருவரின் வீட்டில் தங்கியிருப்பார் என்றும் முஸ்லிம் பகுதிக்கு வந்த தமிழர் ஒருவர் திரும்பி வராவிட்டால், அவர் முஸ்லிம் ஒருவரின் வீட்டில் தங்கியிருப்பார் என்ற நம்பிக்கை இரு பகுதி மக்களிடம் இருந்தது.
ஆனால், இன்று அவ்வாறான நிலை கிழக்கில் இல்லை. இரு தரப்பு மக்களிடமும் அவநம்பிக்கையே மேலோங்கியுள்ளது.
கிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தும் போது பிள்ளையான் சுடுவார், வெட்டுவார், குத்துவார், கடத்துவார் என்றெல்லாம் பொய்ப்பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், எவ்விதமான வன்முறைகளுமின்றி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
இப்போது கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடக்க விருக்கும் போது பொய்ப்பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. உள்ளூராட்சி சபைத் தேர்தல் போன்றே கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களும் சிறப்பாக நடந்து முடியும்.
ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜயசேகர என்னிடம் ஆயுதக் குழுக்கள் இருப்பதாக கூறி முன்னரும் ஒரு தடவை இச்சபையை தவறாக வழி நடத்தினார். அதேபோன்று, இன்றும் இச் சபையில் என்னிடம் ஆயுதக்குழுக்கள் இருப்பதாக கூறுகிறார்.
இது முற்றிலும் பொய்யானது. அரசு எனக்குப் பாதுகாப்புக்காக தந்த அதிரடிப்படையினர் மட்டுமே உள்ளனர். என்னிடம் ஆயுதக் குழுக்கள் இருப்பதை நீருபிக்க முடியுமாவென தயாசிறி ஜயசேகர எம்.பி.க்கு சவால் விடுக்கிறேன்.
அவ்வாறு அவர் நிரூபித்தால், நான் எனது அமைச்சுப்பதவியை அடுத்த நிமிடமே துறக்கத் தயாராகவுள்ளேன்.