* அமைச்சர் டிலான்பெரேரா அனுதாபம்
சிரேஷ்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் மறைவையிட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக நீதி மற்றும் துறைமுக அபிவிருத்தியமைச்சர் டிலான் பெரேரா விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அனுதாப செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
அனைவராலும் அறியப்பட்ட சிறந்த தலைவர், வழிகாட்டி மற்றும் ஒப்பற்ற மனிதரான சிரேஷ்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் படுகொலையையிட்டு நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். இவரின் மறைவு முழு இலங்கைக்கும் பேரிழப்பாகும்.
சுமார் இரண்டு தசாப்த காலம் சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக அவர் இருந்ததுடன் எல்லோராலும் மதிக்கப்பட்ட உதாரண புருஷராக திகழ்ந்தவர்.
அவர் அங்கம் வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி பிரதேச, மாகாண சபை பிரதிநிதிகள் மட்டுமன்றி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் இவரது மறைவினால் கவலையடைந்துள்ளனர்.
மறைந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே எமக்கு தேவையான நேரங்களிலெல்லாம் பாதுகாவலனாக இருந்துள்ளார். அவர் ஒரு சிங்களவராக இல்லாத போதும் பௌத்த சமயத்தில் நம்பிக்கை கொண்டவராவார்.
எனினும் அவர் தனது வாழ்வில் சிங்களவர்கள் மற்றும் பௌத்த சமூகத்தின் மதிப்பினை சரியாக உணர்ந்து மதித்தவர் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண வேண்டுமென நம்பியதுடன் பயங்கரவாதத்துக்கு எதிராக பேராடியவர்.
மறைந்த ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் சேனைகளை சரியாக மதித்து பின்பற்றுமாறு நாட்டின் அனைத்து துறை சார்ந்தவர்களையும் கோருகின்றேன்.
இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒன்றுபட்ட அரசியல் சூழ்நிலையில் அதிகாரம் பகிரப்பட்டு தகுந்த நிரந்தர தீர்வினை எட்டும் அதேநேரம் பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி சவால்களுக்கு முகம் கொடுத்து வீழ்த்தி வெற்றி கொள்வதற்கு உறுதிகொள்வோம்.