* பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவிப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட சம்பளவுயர்வு இன்றைய வாழ்க்கைச்செலவு உயர்வை ஈடு செய்யக் கூடியதாக இல்லை என்று தெரிவித்துள்ள பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் இது தொடர்பாக ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தி மீண்டுமொரு சம்பளவுயர்வினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பசறை, யூரிதோட்ட ஆலய முன்றலில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு மானியவிலையில் அரிசியை பெற்றுக்கொள்ளும் வகையிலான பங்கீட்டு அட்டைகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
பசறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இப்பங்கீட்டு அட்டைகளுடன் மேற்படி இரு நிகழ்வுகளுக்கும் சமூகமளித்திருந்தனர்.
யூரி பெருந்தோட்ட நிகழ்விற்கு யூரி பெருந்தோட்ட முகாமையாளர் ஏ.சுரேன் மாதனவும், மாதோவை பெருந்தோட்ட நிகழ்விற்கு தோட்ட முகாமையாளர் துசார குணசேகரவும் தலைமை வகித்தனர்.
இவ்விரு தோட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் அரிசியைப் பெற்றுக் கொள்வதற்கான பங்கீட்டு அட்டைகள் வழங்கப்பட்டன.
பிரதி சுகாதார அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்துள்ளதாவது; கடந்த அக்டோபர் மாதம் ஜனாதிபதியை பதுளைக்கு வரவழைத்து, பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் முன்னிலையில்,இரு அதி முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தேன்.
அக்கோரிக்கையின் முதன்மைக்கோரிக்கையான சம்பள உயர்வு விடயத்தை, ஜனாதிபதி உடன் கவனத்திற்கெடுத்து தினச் சம்பளத்தில் முப்பது ரூபா என்ற வகையில் அடிப்படைச்சம்பள உயர்வினை வழங்கினர்.
எனது அடுத்த கோரிக்கையான மானிய விலையில் அரிசி வழங்கப்படல் வேண்டுமென்ற விடயத்தை, காலம் தாழ்த்தாது ஜனாதிபதி நிறைவேற்றிக் கொடுத்துள்ளார்.
வாழ்க்கைச் செலவினை ஈடு செய்ய முடியாது தவிக்கும் தோட்டத்தொழிலாளர்களுக்கு மானிய விலையில் அரிசி வழங்கப்படும் இத்திட்டம், - விரைவில் நிவாரணமாக அமையும். தொழிலாளர்களை பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுத்தியே, மலையக பாரம்பரிய தொழிற்சங்கங்கள் இதுவரை சிறுசிறு சம்பள உயர்வுகளைப் பெற்றுக் கொடுத்தது கடந்தகால வரலாறுகளாகும்.
சம்பள உயர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு போராட்டங்களை மேற்கொண்டேயாக வேண்டுமென்பது கலாசாரமாகவே இருந்து வந்தது. ஆனால், நான் அக் கலாசாரத்தினை மாற்றி அமைத்து, தொழிலாளர்களை போராட்டங்களில் ஈடுபடுத்தாது சம்பளவுயர்வு மற்றும் மானிய விலையில் அரிசி ஆகியவற்றைப் பெற்றுக்கொடுத்திருக்கின்றேன்.
ஒவ்வொரு இரு வருடங்களுக்கொரு முறை தொழிலாளர்களின் சம்பளத்தினைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு சில தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர்களின் மரணசாசனம் என்ற கூட்டு ஒப்பந்தம் நடைமுறையிலிருக்கும் போதே தொழிலாளர்களது சம்பளத்தில் உயர்வை ஏற்படுத்த என்னால் இயன்றிருக்கின்றது. அது போன்று மீண்டுமொரு சம்பள உயர்வினைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.
மலையகத்திலுள்ள 1592 பெருந்தோட்டங்களில் பதுளை மாவட்ட பெருந்தோட்டங்களுக்கு ஆரம்பகட்டமாக மானியவிலையில் அரிசியைப் பெற்றுக் கொள்ளும் வகையில் பங்கீட்டு அட்டையும் வழங்கப்படுகின்றன. இது போன்ற பெருந்தோட்டத்துறை சார்ந்த எந்தவொருவேலைத்திட்டமும் பதுளை மாவட்டத்திலேயே முதலில் ஆரம்பிக்கப்படும்.