* அமைச்சர் சந்திரசேன குற்றச்சாட்டு
கடந்த வருடம் நாட்டிலுள்ள 119 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 14 ஆயிரம் கிராமங்களில் ஜனசவிய, கமநெகும வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதும் அதிகாரிகளின் இழுபறி காரணமாகவும் அனுபவமின்மையாலும் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாது போய்விட்டதாக தெரிவித்துள்ள தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, இவ்வருடம் இவ்வேலைத்திட்டங்களை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அண்மையில் மாத்தளை செயலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச சபை தலைவர்களின் ஒன்றுகூடலுக்கு தலைமை வகித்து உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதையும், கிராமப்புறங்களை அபிவிருத்தி செய்வதையுமே முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றார். இவ்விரு செயல்பாடுகளுக்கும் பல பில்லியன் ரூபாக்களை ஒதுக்கீடு செய்து வருகிறார்.
கமநெகும வேலை திட்டத்திற்கு கடந்த வருடத்தை விட மும்மடங்கு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
அத்துடன், இவ்வேலைத்திட்டத்திற்கு உறுதுணையாக செயற்பட ஏனைய அனைத்து அமைச்சுகளுக்கும் சுமார் 600 மில்லியன் ரூபா வரையிலான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளார். எனவே, கமநெகும வேலை திட்டத்தை மேற்கொள்ளும் போது அனைத்து அமைச்சுக்களுடனும் தொடர்புகொண்டு நிதியுதவி பெற்று அந்தந்த அமைச்சுகளுக்கூடாக செய்துகொள்ள வேண்டிய வேலைகளை செய்துகொள்ள வேண்டும் என்றார்.
நகர அபிவிருத்தி அமைச்சர் ரோகண திசாநாயக பேசும்போது கூறியதாவது;
தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சரின் உயரதிகாரிகள் திட்டமிட்டு வேலைகளை மேற்கொள்ள தவறுவதால், கமநெகும வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்த முடியாமல் உள்ளது.
முதலில் அனுப்பப்படும் சுற்றறிக்கையின் பிரகாரம் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வரும்போது, அடுத்த வாரம் அதற்கு முரணான முறையில் மற்றுமொரு சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்படுகிறது.
2 ஆவது சுற்றறிக்கையின் பிரகாரம் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வரும்போது 3 ஆம் வாரம் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட 2 சுற்றறிக்கைகளுக்கு முற்றிலும் முரணான முறையில் மற்றுமொரு சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதன் காரணமாக ஏற்கனவே செலவழிக்கப்பட்ட நிதியும், மனித சக்தியும், காலநேரமும் வீண் விரயமாகின்றது. எனவே, அமைச்சர் சந்திரசேன இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி அமைச்சின் உயரதிகாரிகள் கருத்தொருமித்து திட்டமிட்டு செயற்பட, உடனடி நடவடிக்கையெடுக்க வேண்டும். இதன் மூலமே கமநெகும வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்த முடியும் என்றார்.
அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.எம். கீர்த்திரட்ண பேசும்போது கூறியதாவது;
கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட கமநெகும வேலைத்திட்டம் வெற்றியளித்ததாக கூறமுடியாது.
இவ்வேலைத்திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டிருக்குமானால் கிராமப்புற மக்கள் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயரமாட்டார்கள் என்றார்.