வவுனியா தாலிக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் நடத்திய மிக மோசமான தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேநேரம் கொள்ளையர்கள் வீட்டிலிருந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
நவரசக்குளம் தாலிக்குளம் பகுதியில் நடைபெற்ற இந்த மோசமான சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது;
வீடொன்றை உடைத்துக் கொண்டு ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த நால்வரைக் கொண்ட கொள்ளைக் கோஷ்டி அங்கிருந்தவர்களை பொல்லுகளால் மிக மோசமாகத் தாக்கியுள்ளது.
மண்டை உடைந்து தலைகளில் படுகாயங்கள் ஏற்படுமளவிற்கு ஆண், பெண் வேறுபாடின்றி அனைவரையும் தாக்கிய கொள்ளையர்கள் பின்னர் வீட்டினுள்ளிருந்த பெறுமதிமிக்க தங்க நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் அயலவர்களின் உதவியுடன் மோசமான தாக்குதலுக்கிலக்கான மூன்று பெண்கள் உட்பட ஐவரும் வவுனியா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
நேற்றுக் காலை ஆஸ்பத்திரிக்குச் சென்ற மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களைப் பெற்ற பின்னர் பொலிஸாருக்கு சில கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
வவுனியாவில் கடும் பாதுகாப்புக்கு மத்தியிலும் இரவு நேரக் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுவது வழமையான செயலாகிவிட்டது.