* ஜனாதிபதி அனுதாபம்
எம்.ஏ.எம்.நிலாம்
நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குமான செயற்பாடுகளுக்கு என்னோடு தோளோடு தோள் நின்று உழைத்த தேசப்பற்றுமிக்க யுக புருஷனாக ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.
நேற்று வியாழக்கிழமை கட்டானை வெலிஹேனவில் இடம் பெற்ற மறைந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் அரச மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்குக்கு அனுப்பிவைத்திருந்த அனுதாபச் செய்தியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த அனுதாபச் செய்தியை அமைச்சர் நிமல் ஷ்ரீபால டி சில்வா வாசித்தார்.
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
37 வருடங்களுக்கு முன்னர் சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது நானும் ஜெயராஜும் நண்பர்களானோம். மாணவர் தலைவரான ஜெயராஜ் எனது நம்பிக்கைக்குரிய போராட்டச் சகாவாகவும் நெருங்கிய நண்பனாகவும் ஆனார். என்னை நேரானபாதையில் வழிநடத்திய ஆசானாகக் கூட அவர் காணப்பட்டார். ஒரே அறையில் தங்கி நாம் பாடங்களை மீட்டிய காலத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது. விடுமுறைக்காலத்தில் எமது மெதமுலன வீட்டுக்கு வந்து விடுமுறையை கழித்ததையும் மறக்கவியலாது.
அன்று யாழ்.தேவியில் ஏறி யாழ்ப்பாணம் போய் தமிழ் நண்பர்களுடன் தோசை சாப்பிட்டுவிட்டு காரைநகர் கடலோரத்தில் குதூகலமாக இருந்ததும் இன்றும் நினைத்துப்பார்க்கும் போது மகிழ்ச்சி தருகின்றது.
அடுத்தகட்டமாகப் பாராளுமன்றத்தில் நாமிருவரும் ஒரே கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்து. ஒரே கொள்கை அரசியலில் செயற்படத் தொடங்கினோம். அந்த இறுக்கம் இறுதிவரையில் நீடித்து நிலைத்தது. சவால்களைத் தைரியமாக எதிர் கொண்டவர். மக்கள் சேவைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்த நண்பர் ஜெயராஜ் இன்று எம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
நாட்டில் நிரந்தர சமாதானத்தைக் கொண்டு வருவதற்காக முன்னின்று உழைத்தவர். பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்டும் எமது போராட்டத்திலும், நாட்டின் ஒருமைப்பாட்டைப்பாதுகாக்கும் தேசப்பற்று மிக்க நடவடிக்கையிலும் எம்மோடு கரம் கோர்த்துச் செயற்பட்டவர்.
நண்பர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் பெயர் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுவது உறுதியானதாகும்.
மிலேச்சத்தனமான பயங்கரவாதம் படுகொலை செய்திருப்பது ஜெயராஜை மட்டுமல்ல அவர் பாதுகாத்த ஜனநாயகக் கோட்பாடும் படு கொலை செய்யப்பட்டுள்ளது.
ஜெயராஜின் உடலைப் பார்க்க வந்த போது அன்னாரது மனைவியினதும், மகன், மகள் இருவரதும் கண்களிலிருந்து வெள்ளமாக வந்த கண்ணீரைக்கண்டு நான் நிலைகுலைந்து போனேன்.
நண்பனே நீ என்றுமே எம்மை விட்டுப்பிரியமட்டாய், எதிரிகள் உன் உயிரைப்பறிக்கலாம், உனது உடலை இனிமேல் நாம் காணமுடியாது போகலாம். ஆனால் உனது வழிகாட்டலும் உனது நினைவுகளும் எவராலும் ஒருபோதும் பறித்தெடுக்க முடியாது. நீ மரணிக்காத மனிதனாக என்றென்றும் எம்மோடு வாழ்வாய் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கின்றார்.
பிரதமர் இரங்கலுரை
பிரதமர் இரட்னசிறி விக்கிரம நாயக்கா தமது இரங்கலுரையின் போது தெரிவித்ததாவது;
ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே எதிர்பார்த்த சமாதான பூமியை விரைவில் நாம் உருவாக்க இந்த இடத்தில் உறுதியாயிருக்கின்றோம். பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கும் வரை நாம் ஓயப்போவதில்லை.
ஜெயராஜின் கனவை நனவாக்குவதில் நாம் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை. மனித குலத்தை நேசித்த அவர் பயங்கரவாதத்தை வெறுத்தவராவார். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்பதே அவரது ஒரே இலட்சியமாக இருந்தது. அந்த இலட்சியக் கனவை நாம் விரைவில் நனவாக்குவோம் என்று சபதமெடுப்போம், அதுவே அவருக்குச் செய்யும் நன்றிக்கடனாகும் என்று தெரிவித்தார்.