புத்தாண்டை முன்னிட்டு தூர இடங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து அதிக கட்டணம் அறவிடும் தனியார் பஸ்களின் நடத்துநர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பஸ் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த பஸ்களுக்கான பாதை அனுமதிப்பத்திரமும் ரத்து செய்யப்படும் எனவும் சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறிப்பாக தூர சேவையில் ஈடுபடுகின்ற பஸ்களில் இந்த மோசடிகள் இடம்பெற்றுவருவதாக புகார்கள் கிடைத்துள்ளன.
பண்டிகைக் காலத்தில் மக்கள் தூர இடங்களுக்குச் செல்லும் போது இடங்களுக்கான சரியான கட்டணங்கள் தெரியாததால் சில பஸ் நடத்துநர்கள் தமது விருப்பப்படி கூடிய கட்டணத்தை அறவிடுவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
இதனையடுத்து, சபை இந்த அறிவித்தலை தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு விடுத்துள்ளது.நிர்ணயிக்கப்பட்ட பஸ் போக்குவரத்து கட்டணத்தை விட கூடுதலான கட்டணம் அறவிடும் பஸ்களின் இலக்கம், பாதை இலக்கம் என்பவற்றுடன் தமக்கு முறையிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.