அண்மையில் வெளியாகிய 2007 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி கொ/வெள்ளவத்தை இராமகிருஷ்ண வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவியான செல்வி.ரேகா பாலசுப்பிரமணியம் 10 பாடங்களிலும் `ஏ' சித்தியைப் பெற்றதோடு தமிழ் மொழி மூலப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் சிறந்த புள்ளிகளைப் பெற்றதில் எட்டாவது மாணவியாகவும் மேல் மாகாணப் பாடசாலைகளுள் முதலாவது மாணவியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பௌதிக வளங்கள் குறைந்த ஒரு சிறிய பாடசாலையில் கிடைத்த ஆசிரிய வளத்தையும் தனது விடாமுயற்சியையும் பயன்படுத்தி இத்தகைய பெறுபேற்றைப் பெற்றுக் கொண்டமை ஒரு சாதனை என்றே கூறவேண்டும். இவரோடு இணைந்து பிறந்தவரான செல்வி. ரேணுகா பாலசுப்பிரமணியமும் 10 பாடங்களிலும் `ஏ' சித்தியைப் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
பன்னாலை. தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த இரட்டைச் சகோதரிகள் காலஞ்சென்ற இ.பாலசுப்பிரமணியம், திருமதி பா.விக்னேஸ்வரி ஆகியோரின் புதல்விகளாவர். இவர்களது தந்தை மிகச்சிறந்த ஒரு கணித ஆசிரியராவார். மிகச் சிறு வயதிலேயே இவர்கள் தமது தந்தையாரை இழந்திருந்தாலும் தம் பிள்ளைகளை ஊக்குவித்து சிறந்த ஒரு வழிகாட்டியாக வாழும் பெருமை இவர்களது தாயாரையே சாரும்.
இவர்கள் தமது ஆரம்பக் கல்வியை யா/தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் கற்றனர். 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் செல்வி. ரேகா பாலசுப்பிரமணியம் 174 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியாக இரண்டாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியாக 8 ஆம் இடத்தையும் பெற்றவர். அதன் பின்னர் இருவரும் தமது கல்வியை யா/வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் கற்றனர். நாட்டுச் சூழல் காரணமாக இடம்பெயர்ந்து கொழும்பிற்கு வந்த இருவரும் தமது கல்வியை கொ/வெள்ளவத்தை இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் தொடர்ந்தனர்.
தமது கல்விப் பாதையின் ஆரம்பப் படிகளில் காலெடுத்து வைத்திருக்கும் இந்த நேரத்தில் தாம் சிறந்த முறையில் கல்வி கற்கக் காரணமாக இருந்த தாய், சகோதரன், உறவினர்கள் ஆகியோரோடு, சிறிய பாடசாலையாக இருந்தாலும் தமக்கு இடமளித்து உதவிய பாடசாலை அதிபர் திருமதி இ.ராஜரட்ணத்தையும் எந்தவிதமான பின் வாங்கலும் இன்றி மனமுவந்து கல்வி புகட்டிய ஆசிரியர்களையும் நன்றியுடன் நினைப்பதாக ரேகா, ரேணுகா சகோதரிகள் தெரிவிக்கின்றனர்.