கடந்த 7 ஆம் திகதியன்று ஒரு பெண் தொழிலாளி உட்பட தொழிலுக்குச்சென்ற 18 தொழிலாளர்கள் அப்புத்தளை சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலை அடுத்தே இக்கைதுகள் இடம் பெற்றுள்ளதாக இடதுசாரி முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கைது தொடர்பாக மலையக அரசியல் தலைமைகள் மௌனம் சாதிப்பது குறித்து தனது வேதனையைத் தெரிவித்துள்ள மேற்படி முன்னணி அதன் அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
வாழ்க்கைச் செலவு சுமையாலும் யுத்த நிலைமைகளாலும் நொந்து போய் இருக்கும் மலையக மக்கள் மீது இவ்வாறு பாதுகாப்புக் கெடுபிடிகளை மேலும் அதிகரிப்பது பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதற்குச் சமனாகும்.
மலையகத்தில் அநாவசியமாக இடம்பெறும் கைதுகளுக்கு எதிராக பலமான மக்கள் எதிர்ப்பு இயக்கத்தை ஆரம்பிக்க இடதுசாரி முன்னணி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு மிகவும் தயவுடன் கேட்டுக்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.