-ரொஷான் நாகலிங்கம்-
ஜே.வி.பி.யை பிளவுபடுத்த சதி செய்ய வேண்டிய அவசியமோ தேவையோ ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லையெனவும் கூட்டுச் சேர்ந்து முன்னணி அமைத்து செயற்பட்ட இடதுசாரிகள் பிளவுபட்டது இலங்கையின் அரசியல் வரலாற்றில் புதிய விடயமல்ல என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஐ.தே.க.எம்.பி. தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது;
மக்கள் விடுதலை முன்னணிக்குள் (ஜே.வி.பி) ஐக்கிய தேசியக் கட்சி சதி மேற்கொண்டு அக்கட்சியை பிளவுபடுத்த வேண்டுமென்பதில் எமக்கு எந்த அவசியமுமில்லை.
நாம் பிளவுபடுத்தியிருந்தால் அவர்கள் ஏன் அரசுபக்கம் செல்கின்றனர். அவர்களது பிளவுக்கும் எமது கட்சிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.
அக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற சிலரின் வாகனங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இதனால், அக்கட்சி ஜனநாயகக் கட்சியாவென கேட்கின்றேன். தமது கட்சி இடதுசாரியெனக் கூறுகின்ற இவர்களின் செயற்பாடு வன்முறையை நோக்கியுள்ளது. எமது கட்சியிலிருந்து 17 பேர் அரசு பக்கம் தமது சலுகைகளுக்காகத் தாவினர்.
நாம் அவர்களுக்கு எதிராக எந்த அராஜக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.
இவர்கள் தமக்குள் பிளவுபட்டுள்ளதனால் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை சுமத்தும் அதேநேரம் துரோகிப் பட்டங்களையும் சூட்டுவர். இந்த நிலையிலேயே நாம் அக்கட்சிக்குள் சதி செய்து பிரித்ததாக எம் கட்சி மீது ஜே.வி.பி. யிலிருந்து பிரிந்தவர்கள் கூறுகின்றனர். எதிர்காலத்தில் அக் கட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களது சொகுசு வாழ்க்கை முதல் அவர்கள் செய்த துரோகங்களும் வெளிவரும் என்றார்.