* உலகவங்கி எச்சரிக்கை; இலங்கையில் 34% உயர்வு
சர்வதேச ரீதியாக உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பது தற்காலிகமாக அல்லவென்றும் 2015 வரை இந்நிலைமை நீடித்திருக்குமெனவும் உலகவங்கி நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்திருக்கிறது.
உலக நிதித்துறைத் தலைவர்களின் வாராந்த சந்திப்பு வாஷிங்டனில் இடம்பெற்ற போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் போதே உலக வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.
2008,2009 காலப்பகுதியில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வாகவே இருக்குமெனவும் அதன் பின்னர் கேள்வி, நிரம்பல்களின் அடிப்படையில் விலை குறைவடையும் தன்மையிருப்பதாகவும் உலக வங்கி குறிப்பிட்டிருக்கிறது.
இதேவேளை, உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பானது சில நாடுகளில் வறுமை மட்டத்தை மேலும் தாழ்ந்த நிலைக்கு இட்டுச் செல்லுமென தான் அஞ்சுவதாக உலக வங்கித்தலைவர் ரொபேர்ட் சொலெலிக் கூறியுள்ளார்.
`சர்வதேச சமூகத்தவராகிய நாம் உடனடி ஆதரவை வழங்குவதற்கு மாத்திரம் அணிதிரளாமல் உலகில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படும் நாடுகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கான கொள்கைகளை வகுத்து செயற்பாடுகளை முன்னெடுக்க உதவுவதும் அவசியமென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வறிய நாடுகளுக்கு பணப் பரிமாற்றத் திட்டங்களை அறிமுகப்படுத்துதல் அல்லது விஸ்தரிப்பதன் மூலம் விலைவாசி அதிகரிப்பினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியுமென்ற சிபார்ஸை உலக வங்கி முன்வைத்திருக்கிறது.
உள்நாட்டில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் வறிய நாடுகளின் கொள்வனவுச் சக்தியை அதிகரிப்பதற்கும் இந்த ஆதரவு அனுகூலமாக இருக்குமென உலக வங்கி கூறியுள்ளது.
அத்துடன், முக்கியமான உணவுப் பொருட்கள் மீதான தீர்வைகள், வரிகளை நாடுகள் குறைப்பதன் மூலம் உள்நாட்டில் உணவுப் பொருட்களுக்கான விலைகளை உயரவிடாமல் பார்த்துக் கொள்ள முடியுமெனவும் உலக வங்கி ஆலோசனை தெரிவித்துள்ளது.
இலங்கையில் 34 சதவீதமாகவும் கோஸ்ராரிக்காவில் 21சதவீதமாகவும் எகிப்தில் 13.5 சதவீதமாகவும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பதாகவும் உலகவங்கி சுட்டிக்காட்டுகிறது.
சராசரி பணவீக்கத்திலும் பார்க்க உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு வீதம் சில நாடுகளில் அதிகமாக உள்ளன என்றும் உலகவங்கி குறிப்பிட்டிருக்கிறது. உதாரணமாக ஐரோப்பா, மத்திய ஆசியாப் பகுதியில் 2007 இல் பணவீக்கம் சராசரியாக 10 வீதமாக இருந்தது. ஆனால், உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு 15 சதவீதமாகவும் பாண் மற்றும் தானியங்களின் விலை அதிகரிப்பு 23 சதவீதமாகவும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வு ஆசியாவில் உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகரிப்பு உயிரியல் எரிவாயுவுக்காக பண்ணை நிலங்கள் மற்றும் பயிர்களைப் பயன்படுத்துதல் கால நிலை மாற்றம் மற்றும் எதிர்கால சந்தை நிலைவரம் தொடர்பான ஊகங்கள் என்பனவே உணவுப் பொருட்களின் விலை மோசமாக அதிகரிப்பதற்கும் வறிய நாடுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதற்கும் காரணமாகியுள்ளது.
உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார சமூக ரீதியிலான பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்கு பல நாடுகள் தனது உதவியை நாடியிருப்பதாகவும் உலக வங்கி தெரிவித்திருக்கின்றது.