* `கட்சிகளில் உட்பூசல் வழமை'; அமைச்சர் யாப்பா
மக்கள் விடுதலை முன்னணிக்குள் (ஜே.வி.பி.) ஏற்பட்டுள்ள பிளவுக்கும் அரசிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென்றும் கட்சிகளிடையே உட்பூசல்கள் இருப்பது வழமையானதொன்றென்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவு களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
"கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பஹா வலிவேரியாப் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே படுகொலை செய்யப்பட்டுள்ளமையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அவருக்கு ஏற்கனவே உயிரச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது.
இதனால், அவருக்கு தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டே இருந்து வந்துள்ளது.
அத்துடன், அன்றைய தினம் 1,500க்கும் மேற்பட்ட விஷேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்படி இருந்தும் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் படுகொலை செய்யப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.
தீவிரவாதிகளின் இக் கொடூரத் தாக்குதலை சர்வதேச அமைப்புகளும் வன்மையாகக் கண்டித்துள்ளன. மக்களுக்கு பணியாற்றச் சென்றவேளையிலேயே இக் கொடூரத் தாக்குதல் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் விளையாட்டு நிகழ்வொன்றில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் கவலைக்குரிய விடயமாகும்.
அதனால், நாட்டில் நிலவும் பயங்கர வாதத்தை ஒழிப்பதற்குரிய நடவடிக்கைகளில் சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.
ஜெயராஜ் படுகொலை செய்யப்பட்டுள்ளமை அரசியல் கூட்டமொன்றில் அல்ல. தனது தொகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட புதுவருட விளையாட்டு விழாவிலேயே ஆகும்.
விளையாட்டு வைபவங்களில் இவ்வாறான மனிதாபிமானமற்ற தாக்குதல் நடந்தது சர்வதேச சட்டத்திற்கு முரணானதாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களைக் கூட தீவிரவாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இதன் விளைவாக மக்களோடு மக்களாக நின்ற மும்மொழிகளிலும் பேசக்கூடிய சகல இன மக்களாலும் விரும்பப்பட்ட திறமைமிக்க அரசியல்வாதியை நாடு இழந்துவிட்டது.
தற்போது மக்கள் விடுதலை முன்னணியினருள் (ஜே.வி.பி.) ஏற்பட்டுள்ள பிளவுக்கும் எமக்கும் எதுவிதமான சம்பந்தமும் இல்லை. கட்சிகளிடையே உட்பூசல்கள் இருப்பது வழமையானதொன்றெனெத் தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்கள்
மேலும், அமைச்சரவைத் தீர்மானங்களையும் அமைச்சர் யாப்பா அறிவித்தார்.
மறைந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் உடல் பூரண அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படல் வேண்டும்.
பதுளையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேச செயலகக் கட்டடங்கள் மீளப் புதுப்பிக்கப்படல்,
நாவலப்பிட்டி நகரின் அபிவிருத்தி நடவடிக்கைகள் , மட்டக்குளியில் உயர்தொழில்நுட்பக் கல்லூரி அபிவிருத்தி நடவடிக்கைகள்
வாழைச்சேனை மற்றும் அம்பிலிப்பிட்டிய கடதாசித் தொழிற்சாலைகளை இணைத்து தரமுயர்த்துதல்.