Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Main News
ஜே.வி.பி.அதிருப்தியாளர் குழு மீது அச்சுறுத்தல், தாக்குதல் அதிகரிப்பு
[11 - April - 2008] [Font Size - A - A - A]
* பின்னணியில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பிரேமகுமார் குணரட்ணம்?

ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து சென்ற அதிருப்தியாளர் குழுவினர் மீதான தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள அதேநேரம், அவர்களது வாகனங்கள் சிலவும் கடத்தப்பட்டுள்ளன.

ஜே.வி.பி. பாராளுமன்றக் குழுக்களின் தலைவர் விமல் வீரவன்ச கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் விஷேட உரையொன்றை ஆற்றியதையடுத்து, அவருடன் மேலும் பத்து எம்.பி.க்கள் இணையவே ஜே.வி.பி. இரண்டாகப் பிளவடைந்தது.

இதையடுத்து, அன்று பிற்பகல் கொழும்பு நிப்பொன் ஹோட்டலில், விமல் வீரவன்ச தலைமையிலான அதிருப்தியாளர் குழு நடத்திய செய்தியாளர் மாநாட்டில் ஜே.வி.பி. எம்.பியான ரனவீர பத்திரன குழப்பம் விளைவித்ததாக பொலிஸாரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள்ளிருக்கும் பாராளுமன்றத்தின் வாகனத் தரிப்பிடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் நிறுத்தப்பட்டிருந்த இரு ஜே.வி.பி. அதிருப்தியாளர்களின் வாகனங்கள் இனந்தெரியாத கோஷ்டியொன்றினால் கடத்திச் செல்லப்பட்டது.

அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிவிட்டே இரு எம்.பி.க்களது வாகனங்களும் கராஜிலிருந்து துணிகரமாகக் கடத்திச் செல்லப்பட்டன.

அதிருப்தியாளர் குழுவின் களுத்துறை மாவட்ட எம்.பி.யான பியசிறி விஜயநாயக்கவின் `ரொயோற்ரா டபிள்கெப்' ரக வாகனமும் இரத்தினபுரி மாவட்ட எம்.பி.யான அச்சல சுரங்க ஜாகொடவின் ்ரொயோற்ராீ ரக வாகனமுமே கடத்திச் செல்லப்பட்டன.

இவ்விரு வாகனங்களும் கடத்தப்பட்ட போது, பாராளுமன்ற கராஜிலிருந்த பொலிஸார் இதனைத் தடுக்க முற்பட்டுள்ளனர். எனினும், இவற்றை கடத்தியோர் பொலிஸாரை மிகக் கடுமையாகத் தாக்கிவிட்டே இரு வாகனங்களையும் கடத்திச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரியொருவர் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக பாராளுமன்ற சபாநாயகரிடமும் பாராளுமன்ற பொலிஸாரிடமும் வெலிக்கடை பொலிஸாரிடமும் சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் முறைப்பாடு செய்தனர்.

ஜே.வி.பி.யின் திருகோணமலை மாவட்ட எம்.பி.யான ஜெயந்த விஜயசேகர தலைமையிலான குழுவே இந்த வாகனக் கடத்தல்களில் ஈடுபட்டதாகவும் இவர்கள் தங்கள் முறைப்பாடுகளில் தெரிவித்திருந்தனர்.

இவ்வேளையில், ஜே.வி.பி. யின் மாத்தளை மாவட்ட எம்.பி.யும் அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்தவருமான சுஜாதா அழகக் கோனின் வாகனமும் பாராளுமன்ற கராஜிலிருந்து சாரதியுடன் காணாமல் போனது.

இந்த நிலையில், அதிருப்தியாளர் குழுவில் ஒருவரான புத்தளம் மாவட்ட எம்.பி.யான சமன்சிறி ஹேரத்தின் ஆராச்சிக் கட்டுவ கலாவத்த வீட்டிற்கு நேற்று முன்தினமிரவு சென்ற 25 பேர் கொண்ட கோஷ்டியொன்று கட்சியில் ஏற்பட்ட பிளவு தொடர்பாக சமன்சிறி ஹேரத்துடன் வாதப் பிரதிவாதத்தில் ஈடுபட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அங்கு பெரும் முறுகல் நிலை ஏற்பட்டது.

இவ்வேளையில் அந்த ஜே.வி.பி. ஆதரவாளர் குழு சமன்சிறி ஹேரத் எம்.பி.யை வெளியே இழுத்து வரமுற்பட்டபோது அவரது பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டிருந்த இரு அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸார் அவரைப் பாதுகாக்க முற்பட்டபோது அவ்விருவரிடமுமிருந்த இரு ரிவோல்வர் துப்பாக்கிகளையும் அவற்றுக் குரிய ரவைகளையும் பறித்தெடுத்தனர்.

இதன்பின் எம்.பி.யிடம் வாகனச் சாவியை தருமாறு கேட்டபோது அவர் மறுத்துவிடவே, வாகனச் சாவியை வைத்திருந்த சாரதியை கடுமையாகத் தாக்கிய அவர்கள் அவரிடமிருந்த சாவியை அபகரித்து வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த சாரதி பின்னர் புத்தளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ராகம ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிலாபம் பொலிஸ் நிலையத்திலும் பாராளுமன்ற சபாநாயகரிடமும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஜே.வி.பி. அதிருப்தியாளர் குழுவுக்கு எதிராக தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்களின் பின்னணியில் ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவரும் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருபவருமான பிரேமகுமார் குணரட்ணம் என்பவரே செயற்படுவதாக அதிருப்தியாளர் எம்.பி.க்கள். தெரிவித்துள்ளதாக சில இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன.

பிரேமகுமார் குணரட்ணம் முன்னர் கட்சியின் மிக முக்கிய தலைவராவார். இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரே நாடு திரும்பியிருந்ததாகவும் இவரே இந்த மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்களின் பின்னணியிலிருப்பதாகவும் அதிருப்தியாளர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் இவர், இந்திய படைகள் இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது விடுதலைப் புலிகளுக்கும் ஜே.வி.பி.க்குமிடையில் இணைப்பாளராகச் செயற்பட்டவரெனவும் அந்த இணையத் தளங்கள் தெரிவித்துள்ளன.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com