Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 12, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
நெஞ்சறிந்த பொய்யுரைகள் தாராளம், ஏராளம்
[12 - April - 2008] [Font Size - A - A - A]
நெஞ்சறிந்த பொய்யுரைகள் தாராளம், ஏராளம்

நாளைய தினத்தில் தமிழ், சிங்கள புதுவருடம் பிறக்கப்போகிறது. வரலாற்று ரீதியாகவும் பண்பாட்டு வழியாகவும் இப் புத்தாண்டு தமிழ், சிங்கள மக்களுக்கு முக்கியத்துவம் கொண்டதாகும். பல்வேறு வகையான கொண்டாட்டங்களுடனும் சிறப்பான உணவு வகைகளுடனுமே புத்தாண்டைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், இலங்கையின் ஏகப்பெரும்பான்மையான மக்கள் நாளை புத்தாண்டை முழு மகிழ்ச்சியோடு வரவேற்றுக் கொண்டாடக் கூடிய மனேநிலையிலோ அன்றிபொருள் நிலையிலோ இல்லை என்பதே உண்மையாகும். ஜனாதிபதி முதல் அமைச்சர்கள் வரை சமயத் தலைவர்கள் தொட்டு அரசியல் தலைவர்கள் ஈறாக வெளியிடும் புத்தாண்டுச் செய்திகள் வெறும் புனைவுகளும் புழுகுகளும் கெண்டவைகளாகும். சாந்தி, சமாதானம் நிலவட்டும் என்றும் வன்முறை வேண்டாம் அன்பு, அகிம்சை மலரட்டும் என்றும் வெளியிடும் செய்திகள் நெஞ்சறிந்த பொய்யுரைச் செய்திகளாகவே அமைந்து கொள்வதைக் காணமுடியும்.

புதுவருடம் பிறக்கும் இந்நாளிலே, நாட்டின் நாலாபுறத்தையும் நோக்கின் பல்வேறுபட்ட பிரச்சினைகளின் பூதாகரத்தினுள் மக்கள் புதையுண்டு நிற்பதையே காணமுடிகின்றது. பொருளாதார நெருக்கடியும் அதன் வாயிலான வாழ்க்கைச் செலவின் உயர்வும் அதற்கு ஈடாக சம்பள உயர்வு வழங்க முடியாத கையறு நிலையும் அனைத்து உழைக்கும் மக்களை வாட்டி வதைத்து நிற்கிறது. வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மக்களின் வயிறுகள் பசியால் பற்றி எரிகின்றன. புத்தாண்டு தினத்திலே பால் பொங்கலாகவும் பாற்சோறாகவும் ஆக்கி உண்ண வேண்டிய மக்கள், அரிசி விலை நூறு ரூபாவிற்கு மேல் விற்கப்படுவதனால் வாங்க முடியாது அவதியுற்று நிற்கின்றனர். ஒரு தேங்காய் ஐம்பது ரூபாவிற்கு மேல் விற்பதுடன், ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருட்கள் யாவும் நூறு ரூபாவிற்கும் அதற்கும் மேலாகவும் விற்கப்படும் பயங்கரநிலையைக் காணமுடிகின்றது.

இந்த லட்சணத்தில் தான் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வருடத்தில் 7 சதவீத பொருளாதார அபிவிருத்தி எட்டப்படும் என ஆரூடம் தெரிவித்துள்ளது. ஒரு காலத்தில் மத்திய வங்கியின் புள்ளிவிபர அறிக்கை ஓரளவு நம்பகத்தன்மையுடன் அவதானிக்கப்பட்டது. ஆனால், இன்று அங்கே ஆளும் தரப்பின் விருப்பங்களே புள்ளிவிபரமாக்ப்பட்டு வருவதாகவே நம்பப்படுகிறது. அதற்கேற்ற விதத்திலேயே மத்திய வங்கியின் உயர் பதவிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படுகின்றன. வாழ்க்கைச் செலவுச் சுட்டெண் கடந்த மாதத்தில் 6441.7 ஆக இருந்தது. ஆனால், அதற்கு முந்திய மாதமான பெப்ரவரியில் அச்சுட்டெண் 6345.4 ஆக இருந்தது. ஒரு மாதத்தில் இவ்வாழ்க்கைச் செலவுச் சுட்டெண் 96.3 புள்ளிகளால் அதாவது, 1.5 வீதத்தால் அதிகரித்துக் கொண்டது. இதேபோன்று, பணவீக்கம் மாதாந்தம் புள்ளி புள்ளியாக ஏறிக்கொண்டே செல்கிறது. மார்ச் மாதத்திற்கான பண வீக்கம் 28.1 வீதமாகிக் கொண்டது. இது கடந்த பெப்ரவரி மாதத்தை விட 4.1 வீதத்தால் உயர்வடைந்து கொண்டது.

இவ்வாறு வேகமாக உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவுப் புள்ளிச் சுட்டுடெண்களையோ அன்றி உயர்வடையும் பணவீக்க வீதத்தையோ கட்டுப்படுத்தக்கூடிய நிலையில் அரசாங்கம் இல்லை. மகிந்த சிந்தனை அரசாங்கத்தில் நூற்றிப் பதினைந்து அமைச்சர்கள் வரை உள்ளனர். அமைச்சர்களின் தற்போதைய எண்ணிக்கையைச் சரியாக வரையறுத்துக் கூறுவது கஷ்டமாக உள்ளது. ஏனெனில், திடீர் திடீரென அமைச்சர்கள் நியமனங்கள் தொடர்ந்து இடம்பெற்றவண்ணமே உள்ளன. இவர்களில் ஒருவர்தான் வாணிப நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் பந்துல குணவர்த்தனா. இவர் மகா கெட்டிக்கார பொருளாதார நிபுணர். இவரது பிரதான பணி அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்குவது. அத்துடன், விலை உயர்வுகளுக்கு காரணங்கள் கண்டுபிடித்துக் கூறுவது. எங்களுடைய அரசாங்கம் மட்டுமன்றி, வேறு எந்த அரசாங்கம் வந்தாலும் விலை உயர்வைத் தடுக்க முடியாது என்று கூறும் இவர், நாளை ஐக்கிய தேசியக் கட்சி பதவிக்கு வந்தாலும் அந்த அரசாங்கத்திலும் இந்த நிபுணரே நுகர்வோர் அமைச்சராகவும் அமர்ந்து கொள்வார். அதனை மனதில் வைத்தே இவ்வாறு விலை உயர்வுகளை நியாயப்படுத்தி விளக்கமளித்து வருகிறார்.

மேலும், உலகச் சந்தையில் எரிபொருட்களுக்கான விலை அதிகரிப்பு, காலநிலை மாற்றத்தால் உற்பத்தி பாதிப்பு, உள்நாட்டு உற்பத்தியின் அழிவும் வீழ்ச்சியும் மட்டுமன்றி, யுத்தத்தின் நீட்சி காரணமாகவும், பொருளாதார நெருடிக்கடி மோசமடைந்து வருவது உண்மையேயாகும். ஆனால், இத்தகைய நெருக்கடிகளுக்கும் இன்றைய ஏகாதிபத்திய உலகமயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்கும் உள்ள உள்ளார்ந்த தொடர்புகளைப் பற்றிக் கூறும் துணிவு பலருக்கு இல்லை. கடந்த முப்பது வருடகால திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு வழிகாட்டியவர்கள் உலக வங்கி, சர்வதேச நாணயநிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற ஏகாதிபத்திய முகவர் நிதி நிறுவனங்கள் என்பதைப் பலர் மறந்து விடுகின்றனர். அன்று உள்ளூர் உற்பத்திகளைக் கைவிடும்படி ஆலோசனை வழங்கி நிர்ப்பந்தம் கொடுத்த அதே உலக வங்கி, இப்போது உலக உணவு நெருக்கடி பற்றி எச்சரிக்கை செய்து ஓநாய் அழுகை அழுது நிற்கிறது. நமது நாடு நெல் உற்பத்தியில் தன்னிறைவைக் காணக்கூடிய பன்முக வளங்கள் நிறைந்திருந்தும் இன்று அந்நிய நாடுகளின் அரிசிக் கப்பல்களுக்காகக் காத்துக் கிடக்க வேண்டிய அவலத்தில் உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் கடந்த மூன்று தசாப்த காலத்தில் திறந்த பொருளாதாரக் கொள்கையையும் தனியார் மயத்தையும் கேள்வி நியாயம் இன்றித் தொடர்ச்சியாகப் பின்பற்றி வந்தன. அவற்றின் விளைவுகளையே இன்று நாடும் மக்களும் பொருளாதார நெருக்கடிகளாகவும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் துன்பதுயரங்களாகவும் அனுபவிக்கின்றனர். அதேவேளை, ஆளும் வர்க்கத்தினரும் அவர்களை அண்டிப் பிழைப்பு நடத்துவோரும் சகலவகைச் சுகங்களையும் அனுபவிப்பவர்களாக உள்ளனர். அந்நிய பல்தேசிய நிறுவனங்கள், வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள், இறக்குமதி முகவர்கள் போன்றோர் பொருளாதார லாபங்களை லட்சங்களாகவும் கோடிகளாகவும் பெற்றுக்கொள்கின்றனர். கொழும்பையும் சுற்றுப் புறங்களையும் சேர்ந்த ஐந்து நட்சத்திர உயர்விடுதிகளிலும் உல்லாச சொகுசு மனைகளிலும் உண்டு. குடித்து கும்மாளமிட்டு சகல சுகங்களை அனுபவிப்போர் நாட்டு மக்களின் துன்ப துயரங்கள் பற்றி அறியமாட்டார்கள். பஞ்சம் பசி அறியாத அந்த மனிதர்கள் சொத்து, சுகம் அனுபவிப்பதற்கு மட்டுமே உரியவர்கள். உழைப்பதற்கும் அதற்கான பலாபலன்களைப் பெறமுடியாத நிலையிலுமே நாட்டின் ஏகப்பெரும்பான்மையான தொழிலாளர்கள், விவ சாயிகள் இருந்து வருகின்றனர். விவசாய நிலங்களைக் கொண்ட கிராமப்புறங்களையும் அவற்றில் உழைக்கக் கூடிய மனிதவளமான விவசாயிகளையும் கொண்ட இலங்கை, பிரதான உணவான அரிசிக்கு கையேந்தி நிற்கும் அவலநிலையில் உள்ளது. நாற்புறமும் கடலால் சூழப்பட்ட இலங்கை, மீன் தேவைக்கு அந்நியக் கம்பனிகளின் தகரத்தில் அடைக்கப்பட்ட மீனையும் பலவகைக் கருவாடுகளையும் இறக்கிக் கொள்கிறது. இலங்கையை அந்நியப் பொருட்களின் விற்பனைக்கான சந்தையாகவும் மக்களை நுகர்வுக்குரியவர்களாகவும் மாற்றியமைத்தவர்கள் ஆளும் வர்க்கத்தினரே அன்றி வேறு யாருமல்லர். அன்றைய ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தொடக்கிவைத்த திறந்த தாராள பொருளாதாரக் கொள்கை இன்றுவரையான மகிந்த ராஜபக்ஷ வரை முன்னெடுக்கப்படுகிறது. இவை அனைத்தும் அமெரிக்காவின் தலைமையில் உலகம் பூராவும் நடைமுறைப்படுத்தப்படும் ஏகாதிபத்திய உலக மயமாதல் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டவையேயாகும்.

இத்தகைய நிகழ்ச்சி நிரலை மக்களின் எதிர்ப்பின்றி முன்னெடுப்பதற்கான வழிமுறையாகவே அன்று ஜே.ஆரின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் யுத்தம் திணிக்கப்பட்டது. சிங்கள மக்களின் கவனம் யுத்தத்தின் மீது இருந்துவர நாட்டின் பொருளாதாரக் கொள்கையைத் தடுத்துநிறுத்த முடியாது பின்வந்த ஆட்சித் தலைமைகள் யுத்தத்திலிருந்து மீள முடியாது தொடர்ந்தும் யுத்தக் கொள்கையை அந்நிய சக்திகளின் வழிகாட்டலில் முன்னெடுத்தே வந்தனர். இதன் தொடர்ச்சியைத் தான் மகிந்த சிந்தனை என்ற மகுடத்தின் கீழும் ராஜபக்ஷ சகோதரர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மையில் மத்திய வங்கியின் அறிக்கையைப் பெறும் வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டையும் தம்மையும் இரண்டு பெரும் சவால்கள் எதிர்நோக்கி நிற்பதாகச் சுட்டிக்காட்டினார். ஒன்று பயங்கரவாதம், இரண்டாவது பொருளாதார நெருக்கடி. இவை இரண்டையும், தாம் வெற்றிகொண்டுவிடப்போவதாகச் சூளுரைத்தும் கொண்டார். இவை இரண்டும் தற்செயலாக வானத்திலிருந்து வீழ்ந்த அதிசயப் பிரச்சினைகள் அல்ல. இவை இரண்டும் இலங்கையில் தொடர்ந்து வந்த ஆளும் வர்க்கத்தரப்புகளால் திட்டமிட்டு வளர்க்கப்பட்டவைகளாகும். இவை நமது கண் அல்ல. இதே பிரச்சினைகளை உரிய வழிமுறைகள், கொள்கைகள் மூலம் தூர நோக்குடன் திட்டமிட்டு செயலாற்றிய சில நாடுகளின் ஆட்சித் தலைமைகள் தமக்கு முடிந்தவரை மக்களுக்குச் சார்பாகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் தீர்த்து வைக்கப்பட்டு வந்துள்ளன.

ஆனால், தமது நிலவுடைமை முதலாளித்துவ மேட்டுக்குடி சொத்து சுகங்களையும் உயர்வர்க்க ஆட்சி இருப்பையும் குறியாகக் கொண்ட இலங்கையின் ஆளுவோரால் எந்தவொரு பிரச்சினையையும் உரிய வழிவகைகள் மூலம் தீர்க்க இயலவில்லை. ஜனாதிபதி சுட்டிக்காட்டிய பயங்கரவாதம் என்பது தேசிய இனப்பிரச்சினையேயாகும். அப்பிரச்சினையை மிக இலகுவாகவும் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க விதத்திலும் தீர்த்து வைக்கும் பல சந்தர்ப்பங்கள் வந்துபோயின. அவ்வேளைகளில் எல்லாம் பேரினவாத ஒடுக்குமுறை நிலை நின்றே தேசிய இனப்பிரச்சினை அணுகப்பட்டது. "பேரினவாத விஸ்தரிப்பு மட்டுமன்றி, ஆட்சித் தலைமைகளுக்கும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கும் பணம், சொத்து, வீடு முதலீடு போன்றவற்றைப் பெற்றுக்கொள்ள பல கதவுகள் திறக்கப்பட்டன. சிங்கள ஏழை விவசாயிகளின், தொழிலாளர்களின் பிள்ளைகளான இளைஞர்களும் யுவதிகளும் யுத்தமுனையில் பீரங்கித் தீனியாகிக் கொண்டிருக்க, சிங்கள பௌத்தத்தின் பேரால் ஒரு குறிப்பிட்ட மேல் தட்டினர் சகல செல்வங்களுடனும் வாழக்கூடியவர்களாக மாறிக் கொண்டனர். அத்துடன், இவ்வாறான ஒரு யுத்தநிலை நீடிப்பதை உலக மேலாதிக்கத்திற்காக முயன்றுவரும் அமெரிக்காவும் தென்னாசியப் பிராந்தியத்தில் தனது பிராந்திய வல்லரசு ஆதிக்கத்திற்காக நின்று வரும் இந்தியாவும் விரும்பி அதற்கான காய் நகர்த்தல்களைச் செய்தும் வந்தன.

இவை அனைத்தினதும் ஒட்டுமொத்த விளைவுகளாகவே கொடிய யுத்தத்தையும் தாங்க முடியாத பொருளாதார நெருக்கடிகளையும் நாட்டின் அனைத்து மக்களும் அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக தெற்கிலே நாளாந்தம் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிகளையும் அதன் விளைவான வாழ்க்கைச் செலவுக்கும் உரிய மாற்றுக் கொள்கை எதனையும் பின்பற்ற அரசாங்கம் தயாராக இல்லை. சிங்கள மக்களின் கவனத்தை வடக்குத்திசை நோக்கிய யுத்தத்தின் மீதே திருப்பி வைத்து வருகின்றது. இந்த வருடத்தில் முடிவுக்கு வரும் எனக் கூறப்பட்ட யுத்தம், அடுத்த வருடத்தில் தான் முடிவுக்கு வரும் என இராணுவத் தளபதி அண்மையில் தெரிவித்திருந்தார். இது தொடர்ந்தும் சிங்கள மக்கள் தமது வயிற்றுப் பட்டிகளை இறுக்கிக்கொண்டு பற்றியெரியும் பசித்த வயிறுகளுடன் யுத்தவெற்றியையும் வன்னி மீட்பையும் எதிர்பார்த்திருக்க வேண்டும் என்றே விடப்பட்டுள்ளனர். எத்தனை காலத்துக்குத்தான் சிங்கள மக்கள் ஏமாற்றப்படுவர். எத்தனை காலம் தான் சிங்கள மக்கள் ஏமாறுவார்கள். மாறிவரும் அரசியல் சூழல்கள் விரைவில் இவற்றுக்கான பதில்களை வழங்கவே செய்யும்.

Email this page Your Opinion Print this page
தேசிய தமிழ் நாடகவிழா 2008
நெஞ்சறிந்த பொய்யுரைகள் தாராளம், ஏராளம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com