Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 12, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
தேசிய தமிழ் நாடகவிழா 2008
[12 - April - 2008] [Font Size - A - A - A]
தேசிய தமிழ் நாடகவிழா 2008

இணுவை வசந்தன்

கலாசார அலுவல்கள் திணைக்களமும் இலங்கைக் கலைக்கழகத்தின் தேசிய நாடக சபையும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள தேசிய தமிழ் நாடக விழா எதிர் வரும் 21 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஐந்து நாட்கள் ஜோன் டி சில்வா ஞாபகார்த்த அரங்கில் நடைபெறவுள்ளது. முதல் நாள் நிகழ்வில் அன்று சோக்கல்லோ தா.சண்முகநாதன் வழங்கும் மகாகவியின் "கோடை' நாடகம் முதல் நாடகமாக மேடையேறவுள்ளது.

ஈழத்தின் இலக்கியப் பரப்பில் மறுமலர்ச்சிக்காலத்து எழுத்தாளரான மகாகவி கவிதைத்துறையில் தனித்துவமானவர். கோடை, புதியதொரு வீடு, முற்றிற்று ஆகிய கவிதை நாடகங்களை யாத்துள்ளார். "கோடை' நாடகம் அன்று தாஸீஸியஸ் நெறியாள்கையில் மேடையேற்றப்பட்டு பலரின் பாராட்டுகளையும் அவதானிப்பையும் பெற்ற நாடகம். இன்றும் அதன் தனித்துவம் குன்றாது கொழும்புத் தமிழ்ச் சங்க அரங்கில் சோக்கல்லோ சண்முகநாதனின் நெறியாள்கையில் மேடையேற்றப்பட்டு அதன் தனித்துவத்தை நிலை நிறுத்தியுள்ளது. மகாகவி "கோடை' நாடகத்தை 1966 இல் எழுதினார். 1969 இல் இந்த நாடகம் முதல் முதலாக மேடையேற்றப்பட்டது.

சாதாரண மனிதனின் வாழ்வனுபவங்களைக் கருப்பொருளாகக் கொண்டு கவிதை படைத்த முன்னோடிக் கவிஞரான மகாகவி ஈழத்துக் கவிதைப் பாரம்பரியத்தின் செல்நெறியை நவீன தடத்தில் இட்டுச் சென்றவர். "மகாகவி' என்ற புனைப் பெயரில் அறியப்பட்ட இவர் அளவெட்டியைச் சேர்ந்த உருத்திர மூர்த்தியாவார். சமூகப் பொறுப்புணர்வை நாடிபிடித்துப் பார்க்கும் படைப்பால் கவிதைத் துறைக்குச் செப்பமிட்டவர். குறும்பா, காவியம், பா நாடகங்கள் போன்ற வடிவங்கள் வாயிலாக அர்த்தமுள்ள பங்கை நல்கியுள்ளார். அவருடைய படைப்பாகிய பா நாடகங்களில் ஒன்றான "கோடை' இங்கு முதன்மை பெறுகின்றது.

கோடை: ஈழத்தின் வடக்கேயுள்ள ஒரு கிராமத்தில் வாழ்கின்ற மாணிக்க நாயனக்காரர் வீட்டில் 1937 ஆம் ஆண்டு ஆனி மாதம் ஒரு நாள் வைகறை தொடக்கம் மறுவைகறை வரை நடந்த நிகழ்வுகளை இந்நாடகம் சித்தரித்துக் காட்டுகின்றது.

நாடகம் கண்டு நயக்கத் தெரிந்தோர் நடுவினில் வந்து ஆடல் விழைந்தோம். வணக்கங்கள் கோடி, அனைவருக்கும் மேடையின் மீது வெளிநாட்டார் ஆட்சி விளைத்த ஒரு கோடை.

யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் உள்ள சொற்களைத் தாராளமாகக் கவிதை நாடகத்தில் வெளிக் கொணர்ந்துள்ளார். நாயனக்காரர் வீடு என்றதனால் அங்கு காலை வேளையில் மேளம், நாதசுர இசை கேட்ட படி இருக்கும். அக்கால சூழலில் நாயனக்காரர் கச்சேரிகளை எதிர்பார்த்து இருக்கும் நிலை அரச உத்தியோகத்தை மதித்தல், காதல், ஏமாற்றம், சாதிநிலையைச் சுட்டுதல், போலிச் சாமிமார்களை நம்புதல் போன்ற கருத்து நிலையில் சமுதாயக் கண்ணோட்டத்தை "கோடை' நாடகம் பிரதிபலித்து நிற்பதை அவதானிக்கலாம்.

நாடகமாந்தர்: நீண்ட கால நாடக அனுபவம் மிக்கவரும் பல நாடக மேடைகள் கண்டவரும் 2007 ஆம் ஆண்டு அரச நாடக விழாவில் சிறந்த நடிகருக்கான பரிசைப் பெற்றவரும் சிறந்த கலைஞருமாகிய சோக்கல்லோ தா.சண்முகநாதன் மாணிக்கம் நாயனக்காரராக நடிக்கின்றார். அனுபவ முத்திரை பொறிக்கப்பட்ட நடிகர் தனது பாத்திரத்தை உணர்ந்து பதற்றமோ படபடப்போ இன்றி இயற்கையாக நடித்துள்ளார். அவரின் நடிப்பு சிகரத்தைத் தொடுவதாகவே அமைந்தமை சிறப்பு அம்சமாகும். நடிப்பு அவர் கைவந்த கலை. "கோடை' அவரைக் கொண்டாட வைத்துள்ளது.

மாணிக்கம் நாயனக்காரர் மனைவியாக செல்வம் பாத்திரமேற்று ஏ.எம்.சி. ஜெயஜோதி நடித்துள்ளார். நாடறிந்த நாடகக் கலைஞர். தனது குரல் வளத்தால் வானொலி நாடகங்களில் சக்கைப் போடு போட்டவர். சொல்லில் தெளிவு, முகபாவங்களினால் உணர்ச்சிகளை வெளிக்காட்டும் திறன், பாத்திரத்தை உணர்ந்து அதற்கேற்ப தனது அங்க அசைவுகளை சரியாக உணர்த்தும் பக்குவம் கொண்டவர். பல மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் அவருடைய நடிப்பாற்றலை உயர்த்தி நிற்கிறது.

மாணிக்கம் செல்வம் நாடகத் தம்பதியினருக்கு கமலி என்ற மகளும் கணேஷ் என்ற மகனும் உள்ளனர். நடிப்புக்குப் புதியவர்களாகிய இருவரும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவுக்கு தத்தமது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்கள். கமலியாக செல்வி ஜெனகன் ஹேமபிருந்தினியும் கணேஷாக செல்வன் ம.பிரணவேந்திரனும் நடித்துள்ளார்கள். எதிர்காலம் இவர்களுக்குப் பிரகாசமாகவே உள்ளது.

பஞ்சையர் பாத்திரத்தைச் சலசலப்பின்றி அமைதியாகக் கவரும் தன்மை கொண்ட நடிப்பால் நடிகர் சிவா சுப்பிரமணியம் முன்னிலைப்படுத்தியுள்ளார்.

விதானையாளராக பாத்திரமேற்ற ஆர். உருக்மணிகாந்தன் கம்பீரமான தோற்றப் பொலிவுடன் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.

முருகப்பு வேடம் ஏற்று மடுகிரியே விஜயரத்ன தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். யாழ்ப்பாணப் பேச்சு மொழியில் பா நாடகத்தில் நடித்துள்ளமை வரவேற்பைப் பேறுகின்றது.

சாமியார் வேடம் பூண்ட எஸ்.பாஸ்கரா உண்மைச்சாமியாராகவே உருவம் பெற்று விட்டார். அவர் தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.

கூத்து நாடகக் கலைஞர் கே. பரராசசிங்கம் "காசி' வேடத்தில் கலக்குகிறார். அவரின் முகபாவம், நடிப்பு, தோற்றம் என்பன பிரமாதம். மாணிக்கம் நாயனக்காரரின் சிட்சைப்பிள்ளையாக அவர் வீட்டிலேயே தங்கியிருந்து அவர் மகள் கமலியைக் காதலிக்கும் சோமு என்னும் பாத்திரத்தில் எஸ். லோறன்ஸ் புதுமுகம் அறிமுகமாகின்றார். இருந்தாலும் அவர் சோடை போகவில்லை.

கோடை நாடகத் தயாரிப்பு, நெறியாள்கை ஆகிய துறைகளில் நடிகர், கலைஞர் சோக்கல்லோ சண்முகநாதன் அக்கறையுடன் முன்நிற்கின்றார்.

தேசிய நாடக விழா 2007 இல் சிறந்த மேடை அலங்காரத்திற்கான விருதினைப் பெற்ற ஞானகுரு "கோடை' நாடகத்திற்கும் மேடை அலங்காரத்தைச் சிறப்பான முறையில் உருவாக்கியுள்ளார். யாழ்ப்பாண கிராமத்து ஓலை வீட்டையும் வளவுச் சூழலையும் யதார்த்தமாகக் கண்முன் நிறுத்துகின்றார்.

இசை அமைப்பை நா.நாகேந்திரன், பாலக்காடு பாலச்சந்திர சர்மாவும் கவனிக்க, ஒப்பனையை அனுபவப்புயல் எம்.எச்.ஏ. கபீர் கைவண்ணத்தைக் காட்டியுள்ளார். ஒளி அமைப்பை கே. சொரூபன் மேற்கொண்டுள்ளார். மேடை நிர்வாகத்தை திருமதி எஸ்.மகேந்திரன் அக்கறையுடன் கவனிக்க, பிரதிபார்ப்பவர்களாக எப்.ஏ.அல்பிரட்டும் திருமதி ராஜினி சந்திரலிங்கமும் செயற்படுகின்றார்கள்.

அனுபவமும் ஆற்றலும் மிக்க நடனமாந்தர்களுடன் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களையும் சேர்த்துக் கொண்டு சகலகலாவல்லவன் சோக்கல்லோ தா.சண்முகநாதன் "கோடை' நாடகத்தை மேடையேற்றுகின்றார்.

நாடகம் கண்டு நயக்கத் தெரிந்தோர் நடுவினில் வந்து ஆடி மகிழ்ந்தோம்; வணக்கங்கள் கோடி, அனைவருக்கும்.

Email this page Your Opinion Print this page
தேசிய தமிழ் நாடகவிழா 2008
நெஞ்சறிந்த பொய்யுரைகள் தாராளம், ஏராளம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com