சம்பிரதாயபூர்வ வாழ்த்துக்கள் விடிவை ஏற்படுத்தப் போவதில்லை
பிறக்கும் புத்தாண்டு வாழ்வின் இருள் நீங்கி ஒளிமயமானதாக பிரகாசிக்கட்டுமென்ற வாழ்த்துக்கள் அரசியல், மதத் தலைவர்களிடமிருந்து ஊடகங்கள் வாயிலாக வந்து குவிந்தவண்ணமுள்ளன.
இவை சம்பிரதாயபூர்வமானதானவையாக இருப்பினும் நல்லதே நடக்க வேண்டும் என்ற மனித மனங்களின் இயல்பான எதிர்பார்ப்புகளே இவை என்பதில் ஐயம் இல்லை. ஆனால், இலங்கையரைப் பொறுத்தவரை புத்தாண்டுப் பண்டிகையை துயரமான நினைவுகளுடனும் பதற்றத்துடனுமே எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இலங்கை மக்களைப் பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் ஏதோ ஒரு விதத்தில் கனத்த இதயங்களுடனேயே நாட்களைக் கழிக்கும் நிலை உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ் மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் அறவிடுதல், தடுத்துவைத்தல், இடம்பெயர்வு, பொருளாதாரப் பிரச்சினைகளென சொல்லொணா அவலங்களுடனேயே நாட்களை விரக்தியுடன் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு குடும்பங்களுமே ஏதோ ஒரு விதத்தில் இயற்கையை மீறிய இழப்புகளையும் அவலங்களையும் எதிர்கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இயல்பு வாழ்வை மேற்கொள்ள வேண்டுமென்ற மக்களின் எதிர்பார்ப்பு கானல் நீராகவே உள்ளது.
தமது அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு முடியாமல் ஏதோ ஒரு விதத்தில் துன்பங்கள் அவர்களைப் பாதித்து விடுகின்றன. அரசாங்கத்தினால் பிரஜைகளைப் பாதுகாக்க முடியாத அவல நிலையே தொடர்கின்றது. சட்டம் உரிய நடவடிக்கையை எடுக்குமெனவும் விசாரணைகள் நடத்தப்பட்டு உரியமுறையில் நீதி கிடைக்குமெனவும் அதிகாரத்திலுள்ளோரால் வழங்கப்படும் உறுதிமொழிகள் காற்றில் பறந்துவிடும் நிலைமையே பரவலாக காணப்படுகின்றது.
இனங்கள் மத்தியில் பிளவுகளை அதிகரிக்கும் விதத்திலேயே பெரும்பாலான அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றனர். உள்ளொன்றும் உதட்டிலொன்றுமாகவே அதிகாரத்திலுள்ளோர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
சகல சமூகங்களும் சமத்துவமாக நடத்தப்படுவதாகவும் பிரச்சினைகளை கலந்தாலோசனை, விட்டுக்கொடுத்தல், கருத்தொருமைப்பாட்டுடன் தீர்த்து வைக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் உறுதிமொழிகள் ஏராளமாக அள்ளி வீசப்படுகின்றபோதும் நடைமுறையில் எந்தவொரு பலாபலன்களையும் மக்கள் அனுபவிப்பதாக தெரியவில்லை.
இலங்கையில் இருப்பது பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே எனவும் அதனை முறியடித்து வெற்றி கொண்டால் நாட்டில் வேறு எந்தப் பிரச்சினையையும் சுலபமாக எதிர்கொள்ள முடியுமெனவும் ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்கள் திரும்பத்திரும்பக் கூறிவரும் நிலைமையே தொடர்ந்தவண்ணம் உள்ளது.
இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களுக்கு ஏனைய சமூகங்களுக்கு உள்ள குறிப்பாக பெரும்பான்மை சமூகமான சிங்களவர்களுக்கு உள்ள உரிமைகள் இருக்கின்றதென்பதைப் பல அரசியல் தலைவர்கள் வெளிப்படையாகக் கூறுகின்ற போதும் அவர்களின் செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் எதிர்மாறானவையென்பதை கடந்த கால வரலாறு குறிப்பாக இலங்கைத்தீவு பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் அம்பலமாக்கியுள்ளன.
பொருளாதார நெருக்கடியால் சகல சமூகங்களும் பிரச்சினையை எதிர்நோக்குவது பொதுவான விடயமாகும். ஆனால், தமது இருப்புக்காக, உயிர் வாழ்வுக்காக அன்றாடம் அவலங்களை சந்தித்துக் கொண்டு காலம் கடத்துபவர்களாக தமிழ் மக்கள் உள்ளனர்.
"தீதும் நன்றும் பிறர்தரவாரா' என்று தம்மைத்தாமே ஆசுவாசப்படுத்திக் கொள்பவர்களாகவே பெரும்பாலானோர் உள்ளனர்.
வன்முறைகளிலிருந்தும் விடுபட்டு அமைதி வாழ்வை முன்னெடுப்பதற்கு தற்போது தமிழ் மக்களுக்கு ஒரேயொரு பற்றுக்கோடாக இருப்பது சர்வதேச சமூகமேயாகும். சர்வதேச சமூகத்தின் தலையீட்டுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதே முக்கியமான பிரச்சினையாகும். அதற்குரிய மனப்பக்குவம் அதிகாரத்திலுள்ளவர்கள் மத்தியில் வரவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களுக்கு அதற்குரிய பக்குவமும் முதிர்ச்சியும் குதிர்ந்து வருவதற்கான காலம் வெகு தொலைவில் இருக்கிறது என்பது மட்டும் நிச்சயமாகும்.