ஈராக் விவகாரம் தொடர்பாக புஷ் மீது அமெரிக்க எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
வாஷிங்டன்: ஈராக் தொடர்பில் உறுதியான தீர்மானங்கள் மேற்கொள்வதை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் தவிர்த்து வருவதாக எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை ஈராக் நிலைவரம் தொடர்பிலான தீர்மானங்கள் எடுப்பதை புஷ் ஒத்தி வைத்துள்ளதாக எதிர்க்கட்சி பிரமுகர்கள் விமர்சித்துள்ளனர்.
ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படையினரை வாபஸ் பெறுவதை எதிர்வரும் ஜூலைக்குப் பின்னர் இடைநிறுத்துவது உட்பட பாரிய தந்திரோபாய நகர்வு தொடர்பிலான புஷ்ஷின் அறிவிப்பு வெளிவந்ததைத் தொடர்ந்தே இவ் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஈராக்கின் நிலைமை தொடர்பில் அடுத்த கட்ட மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளபதி டேவிட் பெட்ரயாஸுக்கு அனுமதியளிப்பதற்காகவே இத் தந்திரோபாய நகர்வுகள் மேற்கொள்ளப்படுவதாக புஷ் தெரிவித்துள்ளார்.
ஆனால், இவ் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து உடனடியான பதிலை மக்கள் எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ஈராக்கிலுள்ள படையினரை வாபஸ் பெறுவதற்கான தீர்மானத்தை இடைநிறுத்தியிருப்பது 2009 ஜனவரிக்கு அப்பாலும் அதாவது புஷ் பதவி விலகி புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட பின்னரும் ஈராக்கில் அமெரிக்கப் படையினரின் பிரசன்னம் இருக்குமென்பதை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கப் படையினர் நாடு திரும்புவதற்கான நிலைமைகள் உட்பட முக்கியமான கேள்விகளுக்கு ஜனாதிபதி பதிலளிக்கத் தவறிவிட்டதாக சபாநாயகர் நான்ஸி பெலோசி தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி தோல்வியடைந்த போர் ஒன்றுக்குள் எம்மை இட்டுச் சென்றுள்ளார். அத்துடன், பொருளாதார நெருக்கடி நிலைமைக்குள்ளும் எம்மை இட்டுச் சென்றுள்ளார். எமக்கு அவரிடமிருந்து சில கேள்விகளுக்கான பதில்கள் தேவையெனத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலைக்குள் ஈராக்கிலுள்ள அமெரிக்க படையினரின் 20 பிரிகேட்ஜ் பிரிவுகள் 15 ஆக குறைக்கப்படவிருக்கிறது. அதாவது தற்போது ஈராக்கில் நிலை கொண்டுள்ள 160,000 படையினரில் 20,000 பேர் விலக்கிக் கொள்ளப்படவுள்ளனர்.
ஈராக் நிலைவரம் தொடர்பில் உரையாற்றிய புஷ்;
2007 முற்பகுதியில் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதிலிருந்து ஈராக்கில் குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மத ரீதியான வன்முறைகள் குறைந்திருப்பதுடன், ஈராக்கியர்கள் அல்ஹய்தாவுக்கு எதிராகத் திரும்புவது அதிகரித்துள்ளது. அத்துடன், வர்த்தக நடவடிக்கைகள் யாவும் மீள ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், சட்டமூலங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதெனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இராணுவத் தளபதி பெட்ரயாஸ் மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான கால அவகாசம் வழங்கப்படுமெனத் தெரிவித்துள்ள புஷ், பெட்ரயாஸின் நடவடிக்கைகளுக்கு தான் பூரண ஆதரவு வழங்குவதாகவும் ஜூலைக்கு அப்பாலுள்ள நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.