சீனாவுக்கெதிரான தீர்மானம் அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
வாஷிங்டன்: சீனாவுக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கைதான திபெத்தியர்களை விடுதலை செய்ய வேண்டுமென்றும் அமைதிப் போராட்டம் நடத்தும் திபெத்தியர்களுக்கு எதிரான அடக்குமுறையைக் கைவிட வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள திபெத் மாநிலத்துக்கு விடுதலை கோரி அந்த நாட்டினர் கடந்த மாதம் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சீனா இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது. இதில் 16 பேர் பலியானார்கள் என்று சீனா அறிவித்தது. ஆனால், 100 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக தலாய்லாமா தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்தப் போராட்டம் திபெத்தின் அண்டை மாநிலங்களுக்கும் பரவியது. அதோடு ஒலிம்பிக் தீபம் செல்லும் நகரங்களில் எல்லாம் அங்கு உள்ள திபெத்தியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
ஒலிம்பிக் விழா புறக்கணிப்பு
இந்த நிலையில், சீனாவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவை புறக்கணிக்கப்போவதாக பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசி உள்ளிட்ட சில நாடுகளின் தலைவர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.
திபெத்திய தலைவர் தலாய்லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காணுங்கள் என்று அமெரிக்கா கூறிய யோசனையை சீனா ஏற்க மறுத்துவிட்டது.
இதைத் தொடர்ந்து அமெரிக்க பாராளுமன்றத்தில் சீனாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தில் அமைதியாகப் போராட்டம் நடத்தும் திபெத்தியர்களுக்கு எதிராக நடத்தப்படும் ஒடுக்குமுறையைக் கைவிட வேண்டும் என்றும், அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட திபெத்தியர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் சர்வதேச பார்வையாளர்களையும் பத்திரிகையாளர்களையும் திபெத்துக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
திபெத்தியர்கள் தங்கள் மொழி, பண்பாடு, மத அடையாளம் அனைத்தையும் காப்பாற்றுவதற்கு சீனாவின் சட்டங்களும் கொள்கைகளும் எதிராக உள்ளன என்றும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 413 பேரும் எதிராக ஒருவரும் வாக்களித்தனர்.
இதுபோன்ற தீர்மானம் செனட் சபையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி புஷ் நிருபர்களிடம் பேசுகையில், தலாய்லாமாவுடன் சீனா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்குள் திபெத் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காணவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், சபாநாயகர் பெலோசி மீதும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் சீனா பாய்ந்துள்ளது. ஒலிம்பிக் தீபத்துக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் தூண்டிவிடுவதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கோர்டன் பிரவுண் ஒலிம்பிக் போட்டித் தொடக்கவிழாவில் கலந்துகொள்ளமாட்டேன் என்று அறிவித்து இருக்கிறார். இந்த விழாவை நான் புறக்கணிக்கப் போவதில்லை. அதன் நிறைவு விழாவுக்கு நான் செல்வேன் என்று கோர்டன் பிரவுண் தெரிவித்துள்ளார்.