தாய்லாந்துக்குள் புகமுயன்ற 54 பேர் கொள்கலனுள் மூச்சுத்திணறி மரணம்
பாங்ஹொக்: சட்டத்துக்கு முரணான வகையில் தாய்லாந்துக்குள் உட்புக முயன்ற சென்ற மியன்மாரைச் சேர்ந்த 54 பேர் பாரிய கொள்கலனினுள் மூச்சுத் திணறி இறந்தனர்.
மியன்மார் இராணுவ ஆட்சியின் கீழ் உள்ள நாடாகும். இங்கு பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது.
இதனால், அங்கு வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகம் உள்ளது. படித்த இளைஞர்கள் அயல் நாடான தாய்லாந்தில் திருட்டுத்தனமாக குடியேறி அங்குள்ள தொழிற்சாலைகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஹோட்டல்களிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
இவ்வாறு பத்து இலட்சத்துக்கும் அதிகமான மியன்மார் நாட்டினர் தாய்லாந்தில் குடியேறியுள்ளனர்.
மியன்மார் நாட்டு இளைஞர்களை திருட்டுத்தனமாக தாய்லாந்து நாட்டுக்கு அனுப்பி வைப்பதில் தரகர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் பெரும்தொகையைக் கட்டணமாக வசூலிக்கிறார்கள்.
தாய்லாந்து நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக 100 க்கும் மேற்பட்ட மியன்மார் இளைஞர்கள் ஒரு லொறியில் நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்டனர்.
மியன்மார் நாட்டு எல்லையில் ரானோங் மாநிலத்தில் லொறியை நிறுத்தினார். கதவைத் திறந்து விட்டார் . அப்போது லொறியில் இருந்து மியன்மார் இளைஞர்கள் இறங்கி வெளியேறுவதற்காக அவர் இப்படிச் செய்தார். அப்போது தான் அதில் பயணம் செய்த 54 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்தது.
அந்த கொள்கலன் லொறி காற்று புகமுடியாத அளவுக்கு அனைத்து பகுதியிலும் மூடப்பட்டு இருந்தது. குளிர்பதனம் செய்யப்பட்டு இருந்தது. குளிர்பதன வசதி திடீர் என்று துண்டிக்கப்பட்டதால் அவர்கள் மூச்சுத்திணறி இறந்தனர்.
இறந்தவர்களில் 37 பேர் பெண்கள் ஆவார்கள். லொறிக்குள் மூச்சு திணறிக்கொண்டு இருந்த 67 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் மோசமான நிலையில் இருந்த 20 பேர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
லொறியில் அழைத்துவரப்பட்டவர்கள் எவ்வளவு தூரம் அந்த லொறியில் பயணம் செய்தார்கள் என்பதும் எவ்வளவு நேரம் குளிர்பதன வசதி துண்டித்த நிலையில் பயணம் செய்தார்கள் என்பதும் தெரியவில்லை என்று தாய்லாந்து பொலிஸார் தெரிவித்தனர்.