தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியில் மாற்றங்கள்
கோலாலம்பூர்; மலேசியாவில் நடைபெற்று முடிந்த தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மலேசிய இந்தியக் காங்கிரஸ் கட்சியில் பல திடீர் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
சமீபத்தில் நடந்து முடிந்த மலேசிய பாராளுமன்றத் தேர்தலில், ஆளும் கட்சிக் கூட்டணியில் அங்கம் வகித்த, மலேசிய இந்தியக் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் தோல்வியடைந்ததோடு, கட்சியின் தலைவர் டத்தோ சாமிவேலுவும் தோல்வியடைந்தார். இதையடுத்து, கட்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக டத்தோ சாமிவேலு கூறுகையில்; "கட்சியின் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணியைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் கிளைத் தலைவர்கள், தொண்டர்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக புகார் வந்துள்ளது.
இதனால், இளைஞர் மற்றும் மகளிர் அணிகளுக்கு அதிக அதிகாரம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள், தனித்தனியாக உறுப்பினர் சேர்க்கும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்' என்றார்.
இதற்கிடையே, மலேசிய இந்திய காங்கிரஸின் சமூக மேம்பாட்டு திட்ட இயக்குநராக இருந்த ஜெயசூரியா தனது பதவியை இராஜிநாமாச் செய்துள்ளார்.