அதிருப்தியாளர் குழுவில் இணைந்திருந்த ஜே.வி.பி. பெண் எம்.பி. குத்துக்கரணம்
?தவறாக வழிநடத்தப்பட்டதாக கூறுகிறார்
ஜே.வி.பி. அதிருப்தியாளர் குழுவில் இணைந்திருந்த மாத்தறை மாவட்ட எம்.பி. சுஜாதா அழகக்கோண் மீண்டும் குத்துக்கரணமடித்துள்ளார்.
கொழும்பு தேசிய நூலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிற்கு ஜே.வி.பி.யின் மற்றுமொரு சர்ச்சைக்குரிய எம்.பி.யான ரணவீர பத்திரண சகிதம் வருகைதந்த சுஜாதா எம்.பி. ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்கவிற்கு சார்பாக கருத்து தெரிவித்தார். ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்ததாவது;
கடந்த செவ்வாய்க்கிழமை விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் உரையாற்றவிருந்ததை நாம் முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை.
தேசப்பற்றுள்ள தேசிய இயக்க அலுவலகத்திற்கு எம்மை வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அங்கு நாம் சென்றபின்னர் மீண்டும் நிப்போன் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அப்போதுதான் எம்மால் நெருக்கடி நிலையை புரிந்துகொள்ள முடிந்தது.
அவ்வூடகவியலாளர் மாநாட்டில் எம்மால் சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்க முடியாமலிருந்தது. எனினும் தற்போது எம்மால் தவறுகளையும் உண்மைகளையும் புரிந்து கொள்ள முடிந்தது.
ஊடகங்களில் என்னைப் பற்றி தவறான பல செய்திகள் வெளி வந்துள்ளன. இவற்றில் உண்மையில்லை. ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அல்லது அவருக்கு சார்பான தரப்புக்களினால் என்மீது எத்தகைய அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என்றார்.
இங்கு ஜே.வி.பி.யின் ரணவீர பத்திரண எம்.பி. கருத்து தெரிவிக்கையில்;
ஜே.வி.பி. சார்பில் கடந்த பொதுத்தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிட்ட நான் ஒரு இலட்சத்து மூவாயிரம் வாக்குகளைப் பெற்றேன். எனக்கு கட்சியே பிரதானமானது. நான் எம்.பி.யாக செயற்பட கட்சியே காரணம்.
கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினைகளை விமல் வீரவன்ச பகிரங்கமாக கூறியது தவறு. ஊடகவியலாளர் மாநாட்டில் இவற்றைத் தெரிவித்ததையும் ஏற்க முடியாது.
ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர் குழுவில் செயற்படும் மேலும் 10 எம்.பி.க்களில் பலர் தமது தவறை உணர்ந்துள்ளனர். விரைவில் அவர்கள் ஜே.வி.பி.யுடன் மீண்டும் வந்து இணைந்து கொள்வார்கள் என்றார்.
இவ்வூடகவியலாளர் மாநாட்டில் இவ்விரு எம்.பி.களிடமும் ஊடகவியலாளர்கள் பல கேள்விகளை தொடுத்ததையும், இதனால் அவர்கள் திக்கு முக்காடியதையும் அவதானிக்க முடிந்தது.