விமானப்படையின் 5 ஆவது தளபதி ஹரி குணதிலக்க காலமானார்
இலங்கை விமானப்படையின் ஐந்தாவது தளபதியும் தற்போதைய விமானப்படைத் தளபதியின் தந்தையுமான ஏயார் சீவ் மாஷல் ஹரி குணதிலக்க (79 வயது) நேற்று வெள்ளிக்கிழமை காலை காலமானார்.
1976 ஆம் ஆண்டு இலங்கையின் ஐந்தாவது விமானப்படைத் தளபதியாக பதவியேற்ற இவர் 1981 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த இவர் நேற்றுக் காலை கொழும்பிலுள்ள தனது வீட்டில் காலமானார். விமானப் படைத்தளபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஏயார் சீவ் மாஷல் ஹரி குணதிலக்க ஆய்வாளராகவும் விமர்சகராகவுமிருந்தார்.
இவரது புதல்வரான ஏயார் மாஷல் ரொஷான் குணதிலக்க தற்போது விமானப்படைத் தளபதியாயிருக்கையில் மற்றொரு புதல்வரான கு?ப் கப்டன் சிராந்த குணதிலக்க 1995 ஆம் ஆண்டு கிளாலி பகுதியில் ஹெலிகொப்டர் மீதான தாக்குதலில் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஹரி குணதிலக்கவின் பூதவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் கனத்தை மயானத்தில் இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளது.
இவரது பூதவுடலுக்கு நேற்று முன்னாள் படைத்தளபதிகளும் தற்போதைய தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர்.