வெலிக்கடை பொலிஸில் சரணடைந்த ஜே.வி.பி. எம்.பி.க்கு விளக்கமறியல் உத்தரவு
திருகோணமலை மாவட்ட ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜயசேகரவை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெலிக்கடை பொலிஸில் நேற்று வெள்ளிக்கிழமை சரணடைந்த ஜயந்த விஜயசேகரவையே எதிர்வரும் 7 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
கடந்த புதன்கிழமை பாராளுமன்ற வளாகத்தில், அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜே.வி.பி. அதிருப்தி எம்.பி.க்கள் இருவரின் வாகனங்கள் காணாமல் போயிருந்தன. இச்சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
இச்சம்பவத்துடன் ஜயந்த விஜயசேகர எம்.பி.க்கு தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவும் வெலிக்கடைப் பொலிஸார் அவரிடம் வாக்குமூலம் பெற்றிருந்தனர்.
இந்நிலையிலேயே நேற்று விஜிதஹேரத் எம்.பி. மற்றும் சட்டத்தரணி சகிதம் வெலிக்கடை பொலிஸ் நிலையம் சென்ற ஜயந்த விஜயசேகர அங்கு சரணடைந்தார். இதையடுத்து, பொலிஸார் அவரை நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதன்போதே அவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.