இலங்கையில் பணிபுரியும் ஐ.நா. ஊழியரின் பாதுகாப்பு தொடர்பாக விசேட குழு ஆராய்வு
ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராயும் விசேட குழுவொன்று இலங்கையிலுள்ள தனது ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை கொழும்பிலுள்ள ஐ.நா. தூதரகமும் மற்றும் வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளன.
அல்ஜீரியாவில் அண்மையில் ஐ.நா. பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து உறுப்பு நாடுகளில் பணியாற்றும் தமது ஊழியர்களின் பாதுகாப்புக்காக இக்குழு நிறுவப்பட்டது.
கடந்த காலங்களில் பல வெளிநாட்டு, உள்நாட்டு அரசசார்பற்ற பிரதிநிதிகள் இலங்கையில் பலதரப்புகளினால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இச்சம்பவங்கள் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்ததுடன், ஐ.நா. உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளின் பாதுகாப்பு தொடர்பிலும் கேள்விகளை எழுப்பியிருந்தன.
இந்நிலையிலேயே ஐ.நா. குழுவினர் இலங்கை வந்து தமது ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான அச்சுறுத்தல் குறித்து கண்காணித்ததுடன் முக்கிய சிலரை சந்தித்து கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தனர்.
இக்குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை தமது ஆய்வு நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு இலங்கையிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.
இக்குழு ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் இலங்கையிலுள்ள ஐ.நா. ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பில் விரிவான அறிக்கையை கையளிக்குமெனவும் அதையடுத்து அரசாங்கம் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.