மொழிக் கொள்கையை முறையாக அமுல்படுத்தக் கோரி மலையகத்திலும் கையொப்பம் திரட்டும் பணிகள் முன்னெடுப்பு
அரச கரும மொழிக் கொள்கையை உரியமுறையில் அமுல்படுத்த கோரி நாடுபூராவும் 10 இலட்சம் கையொப்பங்களை திரட்டி ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பும் "சகவாழ்வு' மன்றத்தின் வேலைத் திட்டம் தற்போது மலையகத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக மலையகத்தில் இயங்கும் சமூக நல அமைப்பான பொலிசப் லங்கா நிறுவனம் சகவாழ்வு மன்றத்தின் வழிகாட்டலின் கீழ் மலையகத்தில் குறிப்பாக தோட்டப்புறங்களில் சுமார் 300,000 (மூன்று இலட்சம்) கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக பொலிசப் லங்கா நிறுவன பணியாளர்களையும் தொண்டர்களையும் தெளிவுபடுத்தும் அறிவூட்டல் கருத்தரங்கு கடந்த 9 ஆம் திகதி புதன்கிழமை காலை 9 மணிக்கு தலவாக்கலை லிந்துலையில் அமைந்துள்ள பொலிசப் லங்கா நிறுவன காரியாலயத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் சகவாழ்வு மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.முத்துக்குமார், திட்ட இணைப்பாளர் சரத் பெர்னாண்டோ, திட்ட அதிகாரி சுகத் கரந்தகமுவ, நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர். இந்நிகழ்வு பொலிசப் லங்கா நிறுவனத்தின் இயக்குநர் கே.எஸ்.எஸ்.ஏ.பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது.
திட்ட அதிகாரி முத்துக்குமார் மொழி தொடர்பான தனது உரையின் போது,
நாட்டில் புரையோடியுள்ள இன்றைய பிரச்சினைக்கும் இறுக்கமடைந்துள்ள இன முரண்பாட்டிற்கும் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் மொழி தொடர்பான கொள்கையே காரணம்.
எனினும், 20 வருடங்களுக்கு முன் அரசியல் யாப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழி தொடர்பான கொள்கையை முழுமையாக அமுல்படுத்தினால் இன முரண்பாட்டின் 40 வீதமான பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டிருக்கும். சகவாழ்வு மன்றத்தின் ""ஒரு நாடு இரு மொழி' என்ற கொள்கைக்கமைய இலங்கை அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்டுளள மொழி கொள்கைக்கமைய அமுல்படுத்தும் நடவடிக்கையே 10 இலட்சம் பேரிடம் கையொப்பம் பெறும் வேலையாகும் என்றார்.
பொலிசப் லங்கா நிறுவன இயக்குநர் கே.எஸ்.எஸ்.ஏ.பிரான்சிஸ் தனது உரையில்,
நாட்டில் சகவாழ்வையும் ஒற்றுமையையும் விரும்பும் ஒவ்வொரு பிரஜையும் இதில் கையொப்பமிட வேண்டும். மலையகத்தின் நுவரெலிய மாவட்டத்தில் நாம் பணிபுரியும் 65 தோட்டங்களிலும் இவ்வேலைத் திட்டத்தை 7 பிரதேச வலயமாக பிரித்து சுமார் 3 இலட்சம் கையொப்பங்களை நாம் பெற உள்ளோம். இப்பணிக்காக அமர்த்தப்படும் தொண்டர்களுக்கு விசேட அடையாள அட்டை கொடுக்கவும் நாம் எண்ணியுள்ளோம் என்றார்.
இது தொடர்பாக தொண்டர்களை அறிவூட்டும் மேலும் பல பயிற்சிகள் தொடர்ந்தும் இடம்பெற உள்ளன. சகவாழ்வு மன்றத்தின் மற்றொரு பயிற்சி (செயலமர்வு) இம்மாதம் 17, 18, 19 திகதிகளில் ஹற்றன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.