போலி நிதி ஸ்தாபனம் நடாத்திய கும்பல் தம்புள்ள பிரதேசத்தில் தலைமறைவு
""ஸ்ரீலங்கா மக்கள் நிதித்தாபனம்' என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து பல இலட்சம் ரூபா பணத்தை பெற்று வைப்பிலிட்டும், கடன் வழங்கியும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு நிதி மோசடியிலீடுபட்டு வந்த குழுவொன்று லைமறைவாகியிருப்பதாக, தம்புள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திஸ்ஸ லால் டி சில்வா தெரிவித்தார்.
ஒரு இலட்சம் ரூபா முதல் 11 இலட்சம் ரூபா வரையிலான பணத்தொகையை குறித்த போலி நிறுவனத்தில் வைப்பிலிட்டதாகக் கூறி தம்புள்ள பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தம்புள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
களனியைத் தலைமைக் காரியாலயமாகக் கொண்டு இயங்கிய மேற்படி போலி நிதி நிறுவனம், பொல்பித்திகம, தம்புள்ள, கந்தளாய் ஆகிய நகரங்களில் கடந்த ஐந்தாண்டு காலமாக கிளைகளை நடாத்தி வந்திருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. மாதாந்தம் வட்டியாக ஆறுவீதம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.
தம்புள்ள பிரதேசத்தில் மிகவும் பரபரப்பாக இது பேசப்படுகிறது. மக்கள் வங்கிகளில் வைப்புச் செய்திருந்த வாடிக்கையாளர்கள் கூட மாதாந்த வட்டி வீதம் நூற்றுக்கு ஆறுவீதம் என்று கூறப்பட்டதால் தமது வைப்புத் தொகைகளை மீளப்பெற்று இப்போலி நிறுவனத்தில் வைப்பிலிட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
தம்புள்ள விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இம்மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.