தமிழ் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு வழக்கு தாக்கல்
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலுக்கான திருகோணமலை மாவட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபித்து தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கென திருகோணமலை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதையடுத்தே நேற்று முன்தினம் வியாழக் கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது அநீதியானது என்று தெரிவித்துள்ள தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு, எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள தபால் மூல வாக்களிப்பை ரத்துச் செய்யுமாறும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா பிரிவு) என்பன இணைந்து போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.