தமிழினம் அழிக்கப்படுவதை உடன் தடுத்து நிறுத்துங்கள்
ஐரோப்பிய ஒன்றியத்திடம் நோர்வே மாநாட்டில் வைகோ வேண்டுகோள் யுத்த நிறுத்தம் நடைமுறையில் வேண்டுமென்கிறார் தொண்டமான்
ஒஸ்லோ: இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களையிட்டு கண்களை மூடிக் கொண்டிருக்காமல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதலை முடிவுக்கு கொண்டுவருமாறு கொழும்பு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இதன் மூலம் பழைமை வாய்ந்த இனம் முற்றுமுழுதாக அழித்தொழிக்கப்படாமல் தடுக்க முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் ஆன்மீகக் குரு ஸ்ரீலஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய வைகோ, இலங்கையின் நிலைவரம் மிக மோசமாக இருப்பதாகவும் புராதனமான இனமொன்று முற்றாக அழித்தொழிக்கப்படுகின்றதாகவும் சுட்டிக் காட்டியதுடன் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் கூறியிருக்கிறார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கண்களை மூடிக் கொண்டிருக்கக் கூடாது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகளவிலான தலையீடு அவசியமானதாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் இன நெருக்கடிக்கு இராணுவ ரீதியான தீர்வின் சாத்தியத்தை நிராகரித்திருக்கும் வைகோ, தமிழ் மக்கள் தனியான இனமெனவும் அவர்களின் வாழ்விடங்கள் அவர்களுடைய பாரம்பரிய தாயகம் என்பதையும் ஏற்றுக் கொள்ளாவிடின் பேச்சுவார்த்தை மூலம் தீர்வொன்றை எட்ட முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அரசாங்கத்தின் நீண்ட கால அடக்குமுறைக்குப் பதிலாகவே ஆயுதப் போராட்டம் இடம்பெறுவதாகவும் உலகம் முழுவதும் பல இலட்சம் தமிழர்கள் அகதிகளாக வாழ்வதாகவும் வைகோ சுட்டிக் காட்டியிருக்கிறார். இதேவேளை இளைஞர் வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் கருத்துத் தெரிவிக்கையில் அரசாங்கம் அரசியல் தீர்விலேயே நாட்டம் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். பிரச்சினைக்கு இராணுவ வழியில் தீர்வு காணமுடியாது என்றே நான் நம்புகின்றேன்.
இப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலேயே பதிலளிக்கப்பட வேண்டும். அதற்குரிய நெருக்கத்தை ஏற்படுத்த யுத்தநிறுத்தம் நடைமுறையிலிருக்க வேண்டுமென நான் கருதுகிறேன் என்றும் இந்த மாநாட்டின் கலந்துரையாடலில் பங்குபற்றிய அமைச்சர் தொண்டமான் தெரிவித்திருக்கிறார்.
அமைச்சர் தொண்டமானின் கருத்துகளை ஒத்த நிலைப்பாட்டையே இம்மாநாட்டில் கலந்து கொண்ட ஐ.தே.க எம்.பி. டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவும் வெளிப்படுத்தியிருக்கிறார். அரசாங்கம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வைக் காணும் வழிமுறையை கண்டுபிடிக்குமென்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.