Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 13, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
பிளவுபட்ட ஜே.வி.பி.
[13 - April - 2008] [Font Size - A - A - A]
பிளவுபட்ட ஜே.வி.பி.

பி.ஆர்.நாயகம்

இலங்கையின் மூன்றாவது அரசியற் கட்சியாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ள ஜே.வி.பி.க்குள் உருவாகியிருக்கின்ற மோதல் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மோதல் ஒரு பிளவாக வெளிப்பட்டுள்ள அதேவேளையில், அது வன்முறையாக வெடிக்கும் தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளது. "அதிருப்தி' ஜே.வி.பி. எம்.பி.க்கள் சிலருடைய வாகனங்கள் பலவந்தமாகக் கடத்தப்பட்டுள்ள அதேவேளையில், சிலருடைய வீடுகளும் தாக்கப்பட்டுள்ளன. கட்சியில் மீண்டும் ஒரு ஒற்றுமைக்கு இடமிருக்கப்போவதில்லை என்பதைத்தான் இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைப் பலிக்கடாவாக்கிய இரண்டு புரட்சிகளுக்குக் காரணமாக இருந்த ஜே.வி.பி., மிகவும் கட்டுப்பாடான ஒரு கட்சியாகவே கருதப்பட்டது. இரகசியங்களைப் பேணும் தன்மை, ஒருவித இராணுவக்கட்டுக்கோப்பு போன்றன தென்னிலங்கை அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் ஜே.வி.பி. யிடம் மட்டும்தான் காணப்பட்டது. இருந்தபோதிலும் தற்போது இடம்பெறும் நிகழ்வுகள், குறிப்பாக ஏட்டிக்குப்போட்டியாக ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிடப்பட்ட தகவல்கள் என்பன ஜே.வி.பி.தொடர்பாக சி ங்கள மக்கள் மத்தியில் காணப்பட்ட மாயைகள் பலவற்றை உடைத்துப்போட்டுள்ளது.

இப்போது இரண்டு கேள்விகளுக்கு விடைகாண வேண்டியுள்ளது. ஒன்று ஜே.வி.பி.யில் இப்போது எற்பட்டுள்ள பிளவு கொள்கை ரீதியானதா? அல்லது தனிப்பட்ட ஆளுமை ரீதியானதா ? இரண்டாவது எதிர்கால ஜே.வி.பி. எப்படியாயிருக்கப் போகின்றது?

மிகவும் கட்டுப்பாடான கட்சி என வர்ணிக்கப்பட்ட ஜே.வி.பி.யில் பாரிய பிளவு ஏற்பட்டிருக்கின்றது என்பது மட்டுமின்றி, அதில் சமரசத்துக்கு இடமிருக்கப் போவதில்லை என்பதும் இப்போது வெளிப்படையானவைதான். இரண்டு தரப்பினரும் நடத்திய ஊடகவியலாளர் மாநாடுகளில் தனிப்பட்ட ரீதியான தாக்குதல்கள்தான் நடத்தப்பட்டனவே தவிர, கொள்கை ரீதியான முரண்பாடுகள் எதுவும் பெரிதாக வெளிப்படுத்தப்படவில்லை.

ஆனால், ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த ஒரு தகவல் கொள்கை ரீதியான ஒரு முரண்பாட்டைக் காட்டுவதற்கு உதவலாம். அதாவது கொழும்பு லொட்ஜ்களிலுள்ள தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோது, அதனைக்கண்டித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றுமாறு விமல் வீரவன்சவை மத்திய குழு கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அதனை வீரவன்ச தவிர்த்துக்கொண்டதாகவும் சோமவன்ச தெரிவித்திருந்தார். ஆனால், ஜே.வி.பி.யின் மற்றொரு உறுப்பினரான லால்காந்த இவ்விடயம் தொடர்பாக உரையாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார். பிளவுக்குப் பின்னர், சோமவன்சவின் ஆதரவாளராகவே லால்காந்த செயற்படுகின்றார் என்பது கவனிக்கத்தக்கது.

சோமவன்ச தெரிவித்த இந்தத் தகவலின் மூலம் தெளிவான ஒரு கருத்து உணர்த்தப்படுகின்றது. தமிழர் விவகாரங்களைப் பொறுத்தவரையில், விமல் வீரவன்ச சற்று கடும்போக்கான ஒருவரென உணர்த்துவதற்கு சோமவன்ச முற்பட்டிருக்கிறார். பிள்ளையான் குழுவின் ஆயுதக்களைவு விடயத்திற்கும் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துகள் இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் அவரது முனைப்பையே பிரதிபலித்தது.

ஆக, ஜே.வி.பி.யில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவைப் பொறுத்தவரையில், கொள்கை முரண்பாடு என்பதற்கு அப்பால் விமல் வீரவன்ச என்ற ஆளுமையின் செயற்பாடுகளே பிரதான காரணமாக இருக்கின்ற போதிலும், சிறிய கொள்கை முரண்பாடு ஒன்றையும் காணமுடிகின்றது. அதாவது, விமல் வீரவன்ச தலைமையிலான பிரிவினர் தீவிர இனவாதப் போக்குடையவர்களாகச் சித்திரிக்கப்படுகின்ற அதேவேளையில், சோமவன்ச தலைமையிலானவர்கள் சற்று மென்போக்குடையவர்களாகச் சித்திரிக்கப்படுகின்றனர். ஆனால், நிச்சயமாக இந்தக்கொள்கை முரண்பாடு பிளவுக்குக் காரணமல்ல.

விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின்போதும் சரி, பின்னர் சோமவன்ச அதற்குப் பதிலளிக்கும் முகமாக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துகளின் போதும் சரி தனிப்பட்ட தாக்குதல்களே மேலோங்கியிருந்தது. அதாவது, விமல் வீரவன்சவின் நடத்தைகளை மையப்படுத்தியதாகவே இந்தப் பிளவு அமைந்துள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்!

ஜே.வி.பி.யின் இரண்டாவது புரட்சி தீவிரமடைந்திருந்த ஒரு காலகட்டத்திலேயே விமல் வீரவன்ச கட்சியில் இணைந்துகொண்டவர். அதாவது 1989/1990 ஆம் ஆண்டு. குறுகிய காலத்துக்குள் கட்சியின் உயர்மட்டத்துக்கு உயர்ந்த அவர், தன்னுடைய பேச்சாற்றலால் மக்கள் மத்தியிலும் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்றவர். தன்னை ஒரு கவர்ச்சியான தலைவராக வெளிப்படுத்த விமல் வீரவன்ச மேற்கொள்ளும் உபாயங்கள் தொடர்பாக செய்திகள் ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றன. ஜே.வி.பி.யை விமர்சிப்பவர்கள் விமல் வீரவன்சவின் இந்தக் குணாம்சங்களையும் விமர்சித்துள்ளனர்.

வீரவன்சவின் தலை அலங்காரம், அவரது தாடி மற்றும் அவரது உடை என்பன மட்டுமன்றி, அவரது கைத்தொலைபேசியும் மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு விடயமாகவே இருந்துள்ளன. இவை தொடர்பாகவெல்லாம் எதிரணியினர் விமர்சித்தபோது தனது கட்சித் தலைமை தன்னைக் காப்பாற்ற ஒரு போதும் முன்வரவேயில்லையென விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் குறைப்பட்டுக் கொண்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், ஜே.வி.பி.தன்னை ஒரு புரட்சிகரமான அமைப்பாகவும் அடிமட்ட மக்கள் மத்தியில் வேலைசெய்யும் அமைப்பாகவுமே பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான ஒரு கட்சியில் விமல் வீரவன்ச போன்ற குணாம்சங்களைக் ஒருவர் எவ்வாறு முன்மாதிரியாகச் செயற்படமுடியும் எனக் கேள்வி எழுப்பும் ஜே.வி.பி.யின் ஆதரவாளர் ஒருவர், ஜே.வி.பி.யின் ஸ்தாபகர் றோஹண விஜயவீரவின் மிகவும் எளிமையான வாழ்க்கையைச் சுட்டிக்காட்டுகின்றார்.

ஆக விமல் வீரவன்சவின் நடத்தை ஜே.வி.பி.யின் உயர் மட்டத்திலுள்ள பலருக்கும் எரிச்சலூட்டுவதாகவே இருந்திருக்க வேண்டும். அதனால் தான் வீரவன்சவின் தனிப்பட்ட நடத்தைகள் தொடர்பாக எதிரணியினர் விமர்சிக்கும் போது கட்சித் தலைமை மௌனமாக இருந்தது எனக் கருதமுடியும்.

கட்சியின் பிரசார செயலாளராகவும் நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும் இருந்துள்ள அதேவேளையில், தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கு தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியை வீரவன்ச நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்பதும் உண்மை. இந்த முன்னணி முழுமையாக இனவாதத்தையே அடிப்படையாகக் கொண்டது என்பதுடன், அதன் அதிகாரம்மிக்க செயலாளர் பதவியையும் வீரவன்சவே வகிக்கின்றார் என்பது கவனிக்கத்தக்கது.

ஆக, அரசியல் ரீதியாக தன்னைப் பலப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளை விமல் வீரவன்ச எப்போதோ நன்கு திட்டமிட்டு ஆரம்பித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்! அதனால் இந்தப் பிளவு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்!

Email this page Your Opinion Print this page
மறுபக்கம்
சுலபமாகத் தாக்கப்பட்ட கடினமான இலக்கு....
தனியலகு பிரிவினைக்குத் தடம் அமைக்குமா? (நம்முள்-கவீரன்)
பிளவுபட்ட ஜே.வி.பி.
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com