Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 13, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
தனியலகு பிரிவினைக்குத் தடம் அமைக்குமா? (நம்முள்-கவீரன்)
[13 - April - 2008] [Font Size - A - A - A]
தனியலகு பிரிவினைக்குத் தடம் அமைக்குமா?

நோர்வேயின் அனுசரணையுடன் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னைய சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் பார்க்க வெற்றி அளிக்கக்கூடிய தன்மையதாக இருப்பதாக அக் காலகட்டத்தில் பலரும் கருத்துத் தெரிவித்தனர். பல ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டும், பலர் விபத்துக்களில் சிக்காமல் காப்பாற்றப்பட்டும், பொருட்சேதம் தவிர்க்கப்பட்டும், போக்குவரத்து சீர் செய்யப்பட்டும் வந்ததை வெளிநாட்டாரும் மனிதாபிமானமுள்ள உள்நாட்டவரும் வரவேற்றனர். மூன்றாம் தரப்பினராக நோர்வே அரசாங்கம் செயற்பட்டு இலங்கை அரசாங்கத்தினதும் புலிகள் இயக்கத்தினதும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவர்கள் விளங்கியதால் பிரச்சினைகள் பல சுமுகமாகத் தீர்க்கப்பட்டு வந்தன.

ஆனால், வடகிழக்குத் தமிழ் பேசும் மக்களின் நிலைமை ஒரு ஒப்பீட்டு அடிப்படையில்த்தான் சீரடைந்து வந்தது என்று கருதக்கூடியதாக இருந்தது. காரணம் சுமார் எட்டு இலட்சம் இடம்பெயர்ந்த தமிழ்ப்பேசும் பொதுமக்களுக்குப் பலதரப்பட்ட பிரச்சினைகள் இருந்துவந்தன. அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் உட்பட யாழ்ப்பாணத்தில் நாற்பதாயிரம் மட்டில் இராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்தனர்.

இது பிரச்சினைகளுக்கு இடங்கொடுப்பதாகவே அமைந்தது. ஏதோ அந்நிய நாட்டை ஆட்கொண்டு ஆளுவதுபோல், வலுக்கட்டாயமாகத் தரிப்பில் இருந்த அந்த இராணுவத்தினர் நடந்துகொண்டனர். உள்நாட்டில் ஒரே உரித்துக்களைக் கொண்ட சம உரிமைகள் கொண்ட மக்களிடையே தாம் உறவாடுவதாக அவர்கள் நினைக்கவில்லை.

புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஒரு பாரிய குறைபாடு இருந்தது. அரசாங்கக் கட்சிக்கும் புலிகள் இயக்கத்திற்கும் வெளியே வேறெந்தக் கட்சியும் பங்களிப்பு செய்யாததே அது. ஜே.வி.பி., பொதுஜன ஐக்கிய முன்னணி போன்ற சிங்களக் கட்சிகள் இந்த உடன்பாட்டை வரவேற்கவில்லை. எதிர்ப்பு நடவடிக்கைகளில் அப்பொழுதிருந்தே இறங்கியிருந்தனர். அதன் தாற்பரியம் இன்று 2008 ஆம் ஆண்டில் புரிகிறது.

தென்னாபிரிக்காவின் பிரச்சினையின் போது கறுப்பு இனத்தவரும் வெள்ளை இனத்தவரும் பேச்சுவார்த்தையை குறித்த காலத்தினுள் கட்டுக்கோப்புடன் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. அதேநேரம், அந்நாட்டில் முக்கிய பேச்சுவார்த்தை நடந்த போது அந்த நாட்டின் ஏனைய இருபது கட்சிகளும் குழுக்களாகச் செயற்பட்டு நாட்டின் பொருளாதாரம், அபிவிருத்தி, மீள் குடியமர்த்தல் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டன. ஆனால், இலங்கையில் இந்த நிலைமை இருக்கவில்லை. ஏனைய கட்சிகள், சந்திரிக்கா உள்ளீடாக, இந்தப் பேச்சுவார்த்தையைப் பொறாமை அல்லது கோபக் கண்களுடன் தான் பார்த்து வந்தன. இந்த எதிர்நோக்கு வருங்காலத்தில் பிரச்சினைகளை எழுப்பக் கூடும் என்பதைப் பறைசாற்றிக் கொண்டே இருந்தது.

அரசியல் யாப்பினை மாற்ற பாராளுமன்ற பலம் கிடைக்குமோ இல்லையோ இலங்கையைத் துண்டாடாது ஒரே நாட்டினுள் வெவ்வேறு மக்கட் பிரிவினர் தம்மைத் தாமே ஆளும் வண்ணமான ஒரு நிலையை எட்ட, ஏற்படுத்த, ஒஸ்லோ பேச்சுவார்த்தை இடம் அளித்திருந்தது. ""ஐக்கிய இலங்கை அதனுள் சமஷ்டி அடிப்படையில் உள்நாட்டுச் சுயாட்சி' இது தான் சமாதானத்திற்கான மேல் வாரியான தீர்வு யோசனை. இதைக்கூட சில சிங்களக் கட்சிகள் எதிர்த்தன. ஜே.வி.பி. போன்ற கட்சிகள் இந்த நாடு எல்லோருக்குஞ் சொந்தமானது. இன ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ அது பிரிக்கப்பட்டால் அந்தப் பிரிக்கப்பட்ட அலகு நிரந்தரமாகவே பிரிந்துவிடும் என்றும் இனங்களுக்கிடையே போட்டி பொறாமைகள், வலுப்பெற்றுவிடும் என்றும் இனங்களுக்கிடையேயான இதுவரையிலான (?) சௌஜன்யம் பாதிக்கப்பட்டு விடுமென்றும் இந்தக் கட்சிகள் அச்சம் தெரிவித்து அப்பேர்ப்பட்ட உள்நாட்டுச் சுயாட்சிக்கு இடங்கொடுக்கக்கூடாது என்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

30.03.2008 ஆம் திகதிய சண்டே லீடர் பத்திரிகையில் வந்த ஒரு செய்தியை இங்கு மொழிபெயர்த்துத் தருகிறேன்

""தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (கூMஙக) ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா ""சண்டே லீட' ருக்குக் கருத்துத் தெரிவிக்கையில் கிழக்கிலங்கை மூன்று இனங்களுக்குஞ் சொந்தம் என்றும் முஸ்லிம்களுக்குத் தனியலகு வழங்குவது இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை உருவாக்கும் என்றுங் கூறினார்.

கிழக்கில் ஒருமித்து வாழ்ந்து வரும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையேயான ஒற்றுமையானது முஸ்லிம்களுக்குத் தனியொரு அலகை வழங்குவதால் பாதிக்கப்படும் என்றுங் கூறினார். மூவினங்களும் பலகாலமாக ஒருமித்து கிழக்கிலங்கையில் வசித்து வருகின்றார்கள் என்றுங் கிழக்கு இதன் நிமித்தம் மூவினங்களுக்கும் உரியதென்றும் முஸ்லிம்களுக்குத் தனியலகு வழங்குவதை நாங்கள் எதிர்க்கின்றோம் என்றும் அதற்கு எம்மால் சம்மதம் தெரிவிக்க முடியாதென்றும் மேலும் அவர் கூறினார்'.

மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி.), ஜாதிக ஹெல உருமய போன்றவர்கள் நாட்டைப் பற்றிக் கூறியதையே மௌலானா கிழக்கைப் பற்றிக் கூறியுள்ளார் என்பதை நாங்கள் அவதானிக்க வேண்டும்.

இந்த விதமான கருத்துக்களின் பின்னணியில் பெரும்பான்மையினப் பாதுகாப்பு அம்சம் செறிந்துள்ளதை வாசகர்கள் அவதானிக்க வேண்டும். பெரும்பான்மையினம் அதிகாரத்தைத் தம் கையில் வைத்திருக்க வேண்டும். அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடாது என்பதே இந்தக் கருத்துக்களின் உண்மையான தாற்பரியம். இதைக் குறை கூற வரவில்லை. ஆனால், ஜே.வி.பி.யினரை அல்லது ஜாதிக ஹெல உருமய தலைவர்களை நாங்கள் குறைகூற முடியுமா என்று கேட்பதற்காகத் தான் இந்த மொழிபெயர்ப்பை இங்கு தந்தேன். நாட்டைப் பொறுத்தவரையில் அதிகாரப் பகிர்வுகள் இனங்களுக்கிடையில் அவ்வவ்விடங்களில் சமமாகப் பகிரப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு முரணாகவே இந்தக் கருத்துக்கள் அமைந்துள்ளன. அதுவும் மக்களின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் முன்வைத்தே இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள், சிங்களவர்கள் ஆகியோருந் தாம் பெருவாரியாக வாழும் இடங்களில் தம்மைத் தாமே ஆள விரும்புவார்களே என்று நாம் சிந்திப்பதில்லை. மலையகத் தமிழ்ப் பேசும் மக்களும் அவ்வாறு சிந்திக்க உரித்துடையவர்கள் என்றும் நாம் சிந்திப்பதில்லை. சரித்திரக் கண்கொண்டு அல்லது நாம் பெரும்பான்மையினர் என்ற எண்ணத்தின் அடிப்படையில் சிந்திக்கும் போது இப்பேர்ப்பட்ட சிறுபான்மையினர் பற்றிய சிந்தனைகள் எழுவதில்லை. ஆனால், சர்வதேச ரீதியாக மனித உரிமைகளைப் பறைசாற்றும் ஆவணங்களின் அடிப்படையில் பார்க்கும்போது இப்பேர்ப்பட்ட சிந்தனைகள் கட்டாயம் எழுவன. அவ்வாவணங்களின் அடிப்படையில் நாட்டின் பூர்வீகக் குடிமக்களுக்கும் ஒரே மனித உரித்துக்களே ஏற்புடையன ஆவன; அதேநேரம் அண்மையில் நாட்டின் பிரஜைகளாக ஏற்கப்பட்டவர்களுக்கும் அதே உரித்துக்கள் தான் ஏற்புடையன ஆவன. முதலில் வந்தவர் பின்னர் வந்தவர் என்று நாட்டின் குடிமக்களைச் சட்டம் பாகுபடுத்துவதில்லை.

2003 ஆம் ஆண்டளவில் கிழக்கிலங்கையில் முஸ்லிம் மக்களுடன் நல்ல உறவைப் பேணிக்கொள்ள விடுதலைப்புலிகள் இயக்கம் சில நடவடிக்கைகள் எடுத்தது. கிழக்கிலங்கை முஸ்லிம்கள் தம் சொந்த மண்ணில் விவசாயம் செய்ய இடமளிக்கப் போவதாக எல்.டீ.டீ.ஈ. யினர் அறிவித்தனர். முஸ்லிம்களிடம் இருந்து தம்மால் பறிக்கப்பட்ட நூறாயிரம் ஏக்கர் நிலத்தைத் தாமே திருப்பிக் கையளிக்க முன் வந்தமை சமாதானம் உண்மையில் மலருமோ என்று எல்லோரையும் ஏங்க வைத்தது.

அது பற்றி அடுத்தவாரம் ஆராய்வோம்.

Email this page Your Opinion Print this page
மறுபக்கம்
சுலபமாகத் தாக்கப்பட்ட கடினமான இலக்கு....
தனியலகு பிரிவினைக்குத் தடம் அமைக்குமா? (நம்முள்-கவீரன்)
பிளவுபட்ட ஜே.வி.பி.
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com