மறுபக்கம் (கோகர்ணன்)
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். மண வாழ்க்கை என்னவோ இந்த உலகத்தில் தான் வாழப்படுகின்றது. நிச்சயிக்கப்படுகின்ற இடம், நிச்சயிக்கப்படுகின்ற விடயத்தைப் பற்றிய உத்தரவாதம் எதனையும் தராது
இப்போது சுதந்திர நாடுகள் அமெரிக்காவில் ஏதோவொரு இருட்டறைக்குள் நிச்சயிக்கப்படுகின்றன. ஒரு தேசத்தை நிரந்தரமாகவே பிளந்து பத்துப் பதினைந்து நாடுகளாக்குவதில் பிரித்தானியக் கொலனித்துவத்தை இதுவரை யாரும் மிஞ்சவில்லை. அரபு மண்ணில் அவர்கள் கிழித்த கோடுகள் தான் இன்றும் அரபு மக்களைப் பிளவுபடுத்தியுள்ளன. தேசம் என்றாலே என்னவென்று சிந்தித்திராத ஆபிரிக்க மக்களை நாடுகளாக எல்லை பிரித்து இல்லாத பகைமைகளை உருவாக்கியதில் ஒவ்வொரு ஐரோப்பிய கொலனிய ஆட்சிக்கும் பங்குண்டு. அவர்களுடைய கொலனி ஆட்சிக் காலம் முடிந்தாலும் கொலனிய அதிகாரம் போய்விடவில்லை. சில இடங்களில் புதிய எசமானர்கள் வந்து சேர்ந்தனர். வேறு இடங்களில் பழைய எசமானர்களின் நலன்களைப் பேணுகின்ற விதமான சமரசங்களுக்கு சுதந்திரம் என்று பேரிடப்பட்டது. விடுதலைக்காக எங்கும் போராட்டங்கள் நடந்தன.
போராடி வெல்லப்பட்ட சுதந்திரம் ஒவ்வொன்றுக்கும் பல விதங்களில் குழிபறிக்கப்பட்டது. இதுதான் மூன்றாமுலக நாடுகளின் துன்பக் கதையாகத் தொடர்கிறது. இரத்தம் சிந்திப் பெறப்பட்ட விடுதலைகள் வீணாயின. சில தலைவர்களுடன் செய்யப்பட்ட சமரசங்கள் அந்த நாடுகளின் சுதந்திரத்திற்கும் அண்டை நாடுகளின் சுதந்திரத்திற்கும் ஆப்பு வைத்தன. இன்று ஆபிரிக்காவில் ஐரோப்பிய கொலனிய எசமானர்களின் இடம் அமெரிக்காவிடம் பறிபோய்க்கொண்டிருக்கிறது என்பதை விட்டால் பெருவாரியான ஆபிரிக்க நாடுகள் தமது விடுதலைப் போராட்டத்தை மீளவுந் தொடங்க வேண்டியுள்ளது என்பதே உண்மையான நிலை.
மார்ச் முடிவில் ஸிம்பாப்வேயில் றொபேட் முகாபே அரசாங்கம் தேர்தலில் கடுமையான தோல்வியைச் சந்தித்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிற வரை, "தேர்தல் முறையாக நடக்காது; பத்து லட்சம் கள்ள வாக்குகள் ஆயத்தப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன; வன்முறைக்கான ஆயத்தங்கள் நடைபெறுகின்றன' என்று பலவாறான தகவல்கள் நமக்கு வழங்கப்பட்டன. தேர்தலில் முகாபேயும் அவரது ஸிம்பாப்வே ஆபிரிக்கத் தேசிய ஒன்றியமும் (ஸானு) வென்றிருந்தால் தேர்தல் நம்பகமற்றது என்று நிராகரிக்கப்பட்டிருக்கும் தோற்றதால் அது பற்றிய பேச்சே இனி எழாது.
ஸிம்பாப்வேயின் பொருளாதாரம் மிகவுஞ் சீர்குலைந்துள்ளது என்பது உண்மை. பண வீக்கம் வீதங்களில் சொல்லப்பட்ட நிலை மாறி மடங்குகளில் அதுவும் நூற்று மடங்குகளில் சொல்லப்படுகின்ற அளவுக்குச் சென்றுள்ளது. உணவு ஏற்றுமதி செய்து வந்த நாடு உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்குகிறது. இதற்கான பழி முழுவதும் முகாபே ஆட்சியின் மீது சுமத்தப்படுகிறது. இந்த நிலை எப்படி ஏற்பட்டது என்பது பற்றி எதுவுஞ் சொல்லப்படுவதில்லை. நிருவாகச் சீர்குலைவு, ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் என்கின்ற குற்றச்சாட்டுக்கள் வாய்ப்பாடு மாதிரி நம்பப்படுகின்றன. இக் குற்றச்சாட்டுக்களில் உண்மை உண்டு. ஆனால் ஸிம்பாப்வேயின் பொருளாதாரச் சீர்குலைவுக்கு முக்கியமான காரணம் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஸிம்பாப்வே மீது விதிக்கப்பட்டுள்ள பல்வேறு வணிகத் தடைகளும் பொருளாதார நெருக்குவாரங்களுமே. இவற்றுக்கான காரணம் ஸிம்பாப்வேயின் பயிர்ச்செய்கை நிலங்களையெல்லாம் அங்கு ஒரு நூற்றாண்டுக்கு மேலாக ஆண்டு அனுபவித்து ஸிம்பாப்வே மக்களின் உழைப்பை உறிஞ்சி வாழ்ந்த வெள்ளையர்களின் வசம் இருந்த நிலத்தை ஆபிரிக்கர்களுக்குப் பங்கிட்டது தான். இனி நிலைமைகளில் என்ன மாறாவிடினும் வெள்ளையர்களுக்கு நிலமோ நட்ட ஈடோ கிடைப்பது உறுதி.
ஸிம்பாப்வே சுதந்திரம் மிகவும் கடுமையாகப் போராடி வெல்லப்பட்டது. விடுதலைப் போராட்டம் வளர்ந்து வலுவடைந்து கறுப்பர்களின் கைக்கு அதிகாரம் கை மாறுவதற்கு முதல், 1965 அளவில் ஸிம்பாப்வே ஒருதலைப் பட்சமாகச் சுதந்திரப் பிரகடனஞ் செய்துகொண்டது. இது கறுப்பு இனத்தவரது பிரகடனமல்ல. நாட்டின் இரண்டே சதவீதத் தொகையினரான வெள்ளைக் குடியேற்றக்காரர்களது பிரகடனம். இதற்குத் தூண்டுகோலாக இருந்தது தென்னாபிரிக்காவின் நிறவெறி ஆட்சி. பிரித்தானிய அரசாங்கம் ஸிம்பாப்வேயின் வெள்ளை ஆட்சித் தலைவரான இயன் ஸ்மித்தின் ஆட்சியைக் கவிழ்க்க எந்த விதமான நடவடிக்கையும் எடுத்ததாகக் கூற முடியாது. எப்படியும் தென்னாபிரிக்கா மூலமும் மொசாம்பிக் மூலமும் வணிகம் நடக்கும் என அறிந்துகொண்டே, வணிகமும் தடை என்று பம்மாத்துப் பண்ணியது. ஸ்மித் ஆட்சியை விடுதலைப் போராட்டம் விழுத்துகிற நிலை வந்தபோது தனக்கு உடன்பாடான ஒரு கைப்பொம்மையான நேதன் சித்தோலே என்கிற கறுப்புப் பாதிரியாரை ஆட்சியில் அமர்த்தியது. அதன் பின்பும் போராட்டம் தொடர்ந்தது. 1980 அளவிலேயே உண்மையான அதிகார மாற்றம் நடந்தது.
அப்படியிருந்தும் பிரித்தானிய கொலனிய நலன்களையும் வெள்ளைக் குடியேற்றக் காரர்களது சொத்துடைமைக்கும் பாதுகாப்பாக பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. முகாபேயின் ஆட்சி அவற்றை நிரந்தரமாக ஏற்பதானால் அது சுதந்திரத்தையே அர்த்தமற்றதாக்கி விடும். எனவே, முகாபே ஸிம்பாப்வேயின் பொருளாதாரத்தை ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுவிக்கின்ற நோக்கில் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாயிற்று. அவற்றுக்குக் குழிபறிக்கத் தென்னாபிரிக்காவின் குறுக்கீடும் பயன்பட்டது. ஸிம்பாப்வேயில் முகாபே சோஷலிஸப் பொருளாதாரம் பற்றித் திட்டமிட்ட காலத்தில் சர்வதேச மட்டத்தில் ஏகாதிபத்தியம் தன்னைப் புதிய நவகொலனிய முறைக்கு ஆயத்தப்படுத்தி விட்டது. 1950 முதல் விடுதலை பெற்ற நாடுகள் பலவற்றின் தலைமைகள் ஏகாதிபத்தியத்துடன் சமரசத்திற்கு ஆயத்தமாகி விட்டன. தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி நீக்கப்பட்டபோது, மண்டேலா வெள்ளை அதிகார வர்க்கத்துடன் மட்டுமன்றி ஏகாதிபத்தியத்துடனும் பல சமரசங்களைச் செய்து கொண்டார். இக் காலகட்டம் சோவியத் யூனியனின் உடைவு, கிழக்கு ஜரோப்பாவின் "சோஷலிஸ' அரசுகளின் சரிவு என்பனவற்றையும் கொண்டிருந்த ஒன்று. எனவே, 1990 இற்குப் பின்பு ஸிம்பாப்வேயின் நிலைமை மேலுங் கடினமாகி விட்டது. இன்று ஏற்பட்ட ஆட்சி மாற்றம் நிகழ இவ்வளவு காலம் எடுத்ததுதான் அதிசயமானது.
நிக்கராகுவாவின் விடுதலைக்குப் பின்பு அங்கு உள்நாட்டுக் கலவரத்தைத் தூண்டிப் பயங்கரவாத ஊடுருவல் மூலம் நாட்டின் பாதுகாப்பை மிரட்டலுக்குள்ளாக்கிப் பொருளாதாரத் தடைகள் மூலம் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து முடிவிற் பாராளுமன்றத் தேர்தல் மூலம் 1990 களின் முற்பகுதியில் அமெரிக்கா ஒரு ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதே காலகட்டத்திலேதான் யூகோஸ்லாவியாவைப் பிளவுபடுத்துகிற பணிக்கு அத்திபாரம் இடப்பட்டது. அதுவே இன்று கொசோவோவின் உருவாக்கத்தில் வந்து நிற்கிறது. அது மேலுந் தொடரவுங் கூடும்.
ஈராக்கைப் பிளவுபடுத்துகின்ற திட்டங்கள் கூடச் சாத்தியமானவையே. ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் விரட்டியடிக்கப்பட்ட பிறகு வருகிற ஆட்சி அமெரிக்க நலன்கட்கு உடன்பாடாக இராது என்றால் ஈராக் பிளவுபடுத்தப்பட்டுப் பகுதிகள் அமெரிக்கக் கட்டுப்பாட்டுக்குள் வருகிற வாய்ப்புண்டு. சோமாலியாவிலும் இதற்கான சாடைகள் தெரிகின்றன. முழு நாட்டையும் தனது ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவர இயலாத சூழ்நிலையில் சோமாலியாவின் வட பகுதியில் சோமாலிலாந்து என்கிற தனி நாட்டைப் பிரிக்கிற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அப்பகுதி எதியோப்பியப் படைகளின் துணையுடன் அமெரிக்காவின் ஆதிக்கத்தின் கீழ் வரும். வட ஆபிரிக்காவின் நீண்டதொரு கரையோரப் பகுதியைக்கொண்ட அந்தப் பகுதி, அமெரிக்கா மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த மிக உதவியாக இருக்கும். எனவே, அமெரிக்கா சில புதிய சேதங்களை உருவாக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. அவ்வாறே சில ஆட்சி மாற்றங்களையும் அது முன்னெடுக்கக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன. ஆனால், அவற்றில் எதுவுமே சம்பந்தப்பட்ட தேசிய இனங்களின் நலன்கள் சார்ந்து ஏற்படுகிற மாற்றம் அல்ல.
இன்று லத்தீன் அமெரிக்கா விழித்துக்கொண்டுவிட்டது. அமெரிக்கா 1990 களில் நடத்திய விதமான ஆட்சி மாற்றங்களை இன்று அங்கு நடத்த இயலாது. ஆனாலும், பொலிவியா, வெனிசுவேலா, ஈக்குவடோர் என்பன கியூபாவின் பின்னால் அமெரிக்க இலக்குகளின் வரிசையில் நிற்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் வரலாற்றிலிருந்து கற்றதில்லை. தனது பிழைகளைத் திரும்பத்திரும்பச் செய்துகொண்டே போகிறது. எந்த அமெரிக்க ஆக்கிரமிப்பும் அமெரிக்கப் படைகளை விடுதலைப் படைகள் ஓட ஓட விரட்டியடிக்கும் வரை ஓய்ந்ததில்லை.
இலங்கையில் அமெரிக்கத் தலையீடு வருமா வராதா என்பது நமது கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதை வலிந்து வரவழைக்கிற முட்டாள்களாக நாங்கள் இருக்கக்கூடாது. எந்தத் தலையீடுமே கண்டனத்திற்குரியதுதான். எனவே, தமிழ்த் தலைவர்கள் எனப்படுவோர் எவரும் அந்நியர்கட்கு வெற்றிலை வைத்து வரவேற்கிற முயற்சிகளை நாம் கடுமையாக விமர்சிக்க வேண்டும்.