வன்முறைகளாலல்ல.....
இலங்கையிலேயே மிகவும் கட்டுப்பாடான கட்சி என வர்ணிக்கப்பட்ட ஜே.வி.பி. கட்டுப்பாடுகள் சீர்குலைந்துள்ள ஒரு கட்சியாக இப்போது காட்சியளிக்கின்றது. கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவையடுத்து ஒரு தரப்பினர் மறுதரப்பினரைப் பணியவைப்பதற்கு வன்முறைகளைக் கைகளில் தூக்கியிருப்பதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது.
இதனையடுத்து கட்சிப் பிளவுக்குக் காரணமாக இருந்த கட்சியின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ச தலைமறைவாகியிருப்பதாகவும் செய்தியொன்று வெளியாகியிருக்கின்றது.
ஜனநாயக அரசியலைப் பொறுத்தவரையில் கட்சிகளுக்குள் பிளவுகள் ஏற்படுவதும் தனிக் கட்சிகள் உருவாகுவதும் வழமைதான். கொள்கை காரணமாக ஏற்படும் பிளவாக இருந்தாலென்ன தலைமைத்துவப் பிரச்சினை காரணமாக ஏற்படும் பிளவாக இருந்தாலென்ன அவற்றைத் தீர்த்து வைப்பதற்கு ஜனநாயக அரசியலில் சில வரைமுறைகள் உள்ளன. அந்த வரைமுறைகளுக்கு உட்படாத நிலையிலேயே ஜே.வி.பி. யின் உட்கட்சி மோதலைத் தீர்ப்பதற்கு வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
சில தினங்களாக இடம்பெற்றுள்ள வன்முறைகளில் ஜே.வி.பி.யின் ஒரு பிரிவினரது வாகனங்கள் பலவும் கடத்திச் செல்லப்பட்டுள்ளன. மற்றொரு பாராளுமன்ற உறப்பினருடைய வீடு தாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எம்.பி.யை கடத்திச் செல்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற வளாகத்தில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களே கடத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு பாதுகாப்பான ஒரு பகுதியில் வைத்து வாகனங்கள் கடத்திச் செல்லப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகவே அமைந்திருக்கின்றது. இதில் சம்பந்தப்பட்ட குழுவினர் கடுமையான பாதுகாப்புடன் கூடிய ஒரு பகுதிக்குள் வந்து பாதுகாப்புக்கு நின்றவர்களைத் தாக்கிவிட்டு வாகனங்களைக் கடத்திச் சென்றுள்ளனர் என்பது பாதுகாப்புடன் தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகவே உள்ளது.
ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக அது வளர்ச்சியடைந்து ஆட்சி அதிகாரத்தில் யார் அமர்வது என்பதை நிர்ணயிக்கக் கூடிய ஒரு கட்சியாக அது வளர்ச்சியடைந்துள்ள போதிலும், ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் அதற்கும் பெருமளவு வேறுபாடுகள் உள்ளன. ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் அது ஒரு புரட்சிகர தலைமறைவு அமைப்பாகவே ஆரம்பித்து இரண்டு கிளர்ச்சிகளை மேற்கொண்டு தோல்வியடைந்த ஒரு அமைப்பாகும். பின்னர் ஆயுதப் போராட்டத்தின் மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் நம்பிக்கையிழந்த நிலையிலேயே ஜனநாயக அரசியலுக்குள் பிரவேசிக்கும் முடிவை மேற்கொண்டனர்.
1994 ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டு படிப்படியாக அதிக ஆசனங்களைப் பெற்ற ஜே.வி.பி. கடந்த பொதுத் தேர்தலில் 38 ஆசனங்களைப் பெற்று தன்னை ஒரு பலமான கட்சியாக நிலை நிறுத்தியுள்ளது.
போராட்டங்களுடன் சம்பந்தப்பட்ட ஒரு கட்சியாக ஜே.வி.பி. இருப்பதால் ஆளும். கட்சியைத் தாங்கிப் பிடிப்பதில் ஜே.வி.பி.க்கு பல நெருக்கடிகள் உள்ளன. விலைவாசி உயர்வு, ஊழல் மோசடிகள் என்பன அரச உயர் மட்டத்தில் அதிகரித்திருக்கின்ற போதிலும் அதற்கெதிராக மக்களைத் திரட்டி போராட்டம் ஒன்றை முன்னெடுக்கக் கூடிய இயலுமை ஜே.வி.பி.யிடம் இருக்கவில்லை. காரணம் அரசாங்கத்தைக் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று ஜே.வி.பி.யிடம் இருந்துள்ளது. கடந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தில் அரசாங்கத்தின் திட்டங்களை கடுமையாக விமர்சித்த ஜே.வி.பி. இறுதியில் வாக்கெடுப்பின் போது அரசைப் பாதுகாத்தது.
ஜே.வி.பி.யின் இந்த முரண்பாடான நிலைப்பாடு அது அரசாங்கத்தில் இருக்கின்றதா அல்லது எதிரணியில் இருக்கிறதா எனத் தெரியாத ஒரு குழப்ப நிலையையே ஏற்படுத்தியது. ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் அது மக்கள் போராட்டங்கள் மூலமாகவே தன்னை வளர்த்துக் கொண்டது. ஆனால், இன்று மக்கள் எதிர் கொண்டிருக்கின்ற நெருக்கடிகளை மையப்படுத்தி மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலையும் ஜே.வி.பி.யில் வெடிப்புகள் தோன்றுவதற்குக் காரணம். போராட்டத்தின் மூலம் வளர்ந்த ஒரு கட்சி சமரசத்துக்காக மௌனமாக இருப்பது உட்பிளவுகளுக்குக் காரணமாக இருந்துள்ளமைக்கு சரித்திரத்தில் பல சான்றுகள் உள்ளன.
இந்த வகையில் தான் ஜே.வி.பி.யில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவையும் நோக்க வேண்டும். தற்போதைய காலகட்டத்துக்கான ஒரு தெளிவான அரசியல் செயற்றிட்டம் இல்லாமைதான் இந்தப் பிளவுக்குக் காரணம் எனக் கூறலாம். முக்கியமான பிரச்சினைகளில் தெளிவான கொள்கைகள் எதுவும் ஜே.வி.பி.யிடம் இருக்காதது தான் அதனால், செயற்றிட்டம் எதனையும் வகுக்க முடியாமல் போனமைக்குக் காரணம்.
தெளிவான கொள்ளை வழிநடத்தல் இருந்திருந்தால் இவ்வாறான ஒரு பிளவு ஏற்பட்டிருக்காது என்பது உண்மை. அதனையும் மீறி பிளவு ஏற்பட்டிருந்தாலும் கொள்கை ரீதியான தாக்குதல்களே இடம் பெற்றிருக்கும். ஆனால், இப்போது தனி நபர்கள் மீதான தாக்குதல்களே செய்திகளை ஆக்கிரமிக்கின்றன. இதன் அடுத்த கட்டம் தான் வன்முறை!
ஜே.வி.பி. யின் கட்டுக் கோப்பு உதாரணம் காட்டக் கூடியதாக இருந்தது உண்மை. இன்று அனைத்தும் சிதறிப் போயுள்ளன. இது ஜனநாயக அரசியலுக்கு ஒரு பின்னடைவு. இந்த நிலையில் ஜே.வி.பி. தன்னுடைய கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் முற்றாக மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய ஒரு தேவையுள்ளது. யதார்த்தங்களைப் புரிந்து கொண்டவர்களாக கொள்கைகளை வகுக்க வேண்டும். இதன் மூலமாகவே மக்களின் செல்வாக்கை அவர்களால் தக்க வைக்க முடியும். வன்முறைகளால் அல்ல!.