பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப் ஆறு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை சீனாவுக்கு மேற்கொண்டுள்ளார்.
ஆனால், முன்னாள் பிரதமர் நவாஸ் ஹெரீப்பின் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் முஷாரப்புடன் செல்லாமல் சீன விஜயத்தைப் புறக்கணித்துள்ளனர்.
நேற்று சீனா புறப்பட்டுச் சென்ற அவருடன் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி இராணுவ அமைச்சர் அகமது முக்தார் மற்றும் குழுவினரும் சென்றனர்.
ராவல்பிண்டி அருகே உள்ள சக்கலாலா விமான நிலையத்தில் பிரதம கிலானி இராணுவத் தளபதி பர்வேஸ் கியானி மற்றும் அதிகாரிகள் முஷாரப்பை வழி அனுப்பி வைத்தனர். முஷாரப்புடன் நிதி அமைச்சர் இஷாக் தார், அறிவியல் தொழில்நுட்பதுறை அமைச்சர் தெமினா தவுலத்தனா ஆகியோரும் சீனா செல்வதாக இருந்தது.
இவர்கள் இருவரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்சியைச் சேர்ந்தவர்கள். முஷாரப் பதவி விலக வேண்டும் என நவாஸ் ஷெரீப் கட்சித் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதனால், முஷாரப்புடன் சீனா செல்வதை இந்த இரு அமைச்சர்களும் புறக்கணித்தனர். முஷாரப் தனது சீன பயணத்தின் போது இருதரப்பு உறவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.