இராணுவத்தின் மனநிலையை அதிகரிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் அழைப்பு
நாட்டு மக்களைப் பாதுகாக்க இராணுவத்தின் மனநிலையை அதிகரிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
""சிங்கள புத்தாண்டானது இலங்கை வாழ் சிங்கள மக்களுக்கு மட்டுமன்றி இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும் ஒட்டுமொத்தமாக இந்து பக்தர்களுக்கும் மகிழ்ச்சியூட்டும் ஒரு விழாவாகும். சூரியன் மீனராசியிலிருந்து
மேட ராசிக்கு பயணிக்கும் இயற்கை நிகழ்வொன்றினை விழாவாகக் கொண்டாடுவதற்கு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு சமூகமொன்றிலே வழக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது. சிங்கள புத்தாண்டின் சகல நடவடிக்கைகளையும் சுப முகூர்த்தங்களில் ஆரம்பிப்பதானது மற்றுமொரு சிறப்பம்சமாகும். அதனூடாக, சிங்கள தமிழ் புத்தாண்டானது நமக்கு சிறந்ததொரு முன்மாதிரியைப் பெற்றுத் தருகின்றது. அதாவது நேரத்துக்கு வேலை செய்யும் பழக்கத்தை நம்மத்தியில் உருவாக்குவதாகும். புண்ணிய காலப்பகுதியினுள் மத அனுஷ்டானங்களை மேற்கொள்வதினூடாக மனிதர்களை மதத்தையும் தர்மத்தையும் எடுத்து நடக்கக் கூடியவர்களாக மாற்றுவதற்கும் முதியோருக்கு வெற்றிலை கொடுத்து மதிப்பளிப்பதற்கும் பழைய கோபதாபங்களை மறந்து குடும்பத்தின் அனைத்து உறவினர்களும் நண்பர்களும் ஒன்று சேர்வதும் சிங்கள தமிழ்ப் புத்தாண்டிலுள்ள சிறப்பம்சமாகும். தலைக்கு எண்ணெய் தேய்ப்பதினூடாக சுதேச வைத்தியத்திற்கும் முக்கியத்துவமளிக்கும் பழக்கமானது உலகிலே வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு சம்பிரதாயங்களைக் கொண்டுள்ளது. புத்தாண்டிலே வேலைத் தொடங்குவதும் மரமொன்றை நாட்டுதல் போன்ற விவசாயத்துடன் சம்பந்தப்பட்டதொரு பழக்கத்தின் மூலமாகும்.
பல்லாண்டு காலமாக வடக்கு கிழக்கிலே காணப்பட்ட அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளின் மூலம் அந்த பிரதேசங்களில் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக நாடு முழுவதிலும் வாழும் மக்களுக்கு சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டினை சுதந்திரமாகக் கொண்டாட முடியாதிருந்தமை நாம் அனைவரும் அறிந்து வைத்திருந்த விடயமாகும். சிங்கள தமிழ் புத்தாண்டானது நெருங்கி வரும் நேரத்திலே கொடூர பயங்கரவாதிகள் விளையாட்டு போட்டியொன்றில் நுழைந்து பெறுமதிமிக்க பல உயிர்களை பலிகொண்டமையின் மூலம் இயல்பு வாழ்க்கையை இல்லாமல் செய்வதற்கு மேற்கொண்டு வரும் முயற்சியானது நிந்தனைக்குரிய விடயமாகும். கொடூர புலிப் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தை முறியடிப்பதற்கு புலிப் பயங்கரவாதிகள் முயற்சிப்பது அவர்களுக்கு நல்லொழுக்கமுள்ள ஒரு சமுதாயத்தின் பெறுமதி விளங்காமையினாலாகும். இன்றைய தினம் நம் அனைவரினதும் பொறுப்பாகக் காணப்படுவது இராணுவத்தினரின் மனநிலையை அதிகரித்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் செயற்பாட்டிற்கு இயன்றளவு ஒத்துழைப்பதாகும் என்பதே எனது நம்பிக்கையாகும்.
படையினர் களத்திலே அடைகின்ற வெற்றியைக் கண்டு நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம். உடனே கொடூர பயங்கரவாதிகளினால் கொலை செய்யப்படும் எமது அப்பாவி உறவினர்களை கட்டியணைத்து கதறியழுகின்றோம். இந்த நிலையிலிருந்து நாம் உடனே விடுபட வேண்டும். இராணுவத்தினர் போர் புரிவது பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் சகோதரத்துவமாகவும் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காகவே. அதனால், நிராயுதபாணிகளான அப்பாவி மக்களுக்கு சுதந்திரமாக வாழ்வதற்கு கொடூர பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என பிறந்துள்ள புத்தாண்டிலே அழைப்பு விடுக்கிறேன்.
பிறந்துள்ள சிங்கள, தமிழ் புத்தாண்டானது இலங்கை வாழ் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கும் அதன் பொருட்டு விழாக்களை கொண்டாடும் இலங்கைக்கு வெளியே வாழும் எமது இலங்கை நண்பர்களுக்கும் சமாதானம் அமைதி நிறைந்த சிறந்த எதிர்காலத்திற்கானதொரு நாளின் ஆரம்பமாக பிறக்கும் புத்தாண்டானது அமைய வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.