எந்தவொரு நிகழ்வையும் அச்சம், பீதிக்கு மத்தியிலேயே நடத்த வேண்டியுள்ளது
?பசறை ஐ.தே.க. அமைப்பாளர் வேலாயுதம்
கந்தப்பளை நிருபர் நாட்டில் வன்முறை அதி உச்சக்கட்டத்தையடைந்துள்ளது. இன்று இந்நாட்டில் எந்தவொரு நிகழ்வையும் அச்சத்திற்கும் பீதிக்கும் மத்தியிலேயே நடத்த வேண்டியுள்ளது. எத்தனையோ உயிர்கள் அநாவசியமாகப் பலியெடுக்கப்படுகின்றன. எந்த இன மதத்தைச் சார்ந்தவராயினும் அனைத்து உயிர்களும் மனித உயிர்களே என்பதை எவரும் மறுக்கமுடியாது.
எனவே, நாட்டின் மனித உயிர் அழிவுகளையும் சொத்து அழிவுகளையும் தடுக்க நாம் முனைய வேண்டும்.
இவ்வாறு பசறைத் தொகுதியின் ஐ.தே.க. பிரதான அமைப்பாளரும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான க.வேலாயுதம் தெரிவித்தார். பசறை பிரதேச சபை கேட்போர்கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
""புதுவருடத்தைக் கொண்டாட எந்த வழியுமின்றி மக்கள் கவலையுடன் இருக்கின்றார்கள். விலைவாசி உயர்வும் நாட்டின் அச்ச நிலையும் வன்முறையின் உச்சக்கட்டமும் காணப்படும்போது புதுவருடத்தைக கொண்டாட முடியுமா? என்று வினவுகிறார்கள்.
வடக்கு, கிழக்கில் அன்றாடம் விமானக் குண்டு வீச்சு, பீரங்கித் தாக்குதல், மனிதப் படுகொலைகள் என இன்னோரன்ன கொடூர துன்பங்களுக்கு மக்கள் முகம் கொடுக்கின்றனர். மலையகத்தில் எந்தவித தவறுகளையும் செய்யாத எமது மக்கள் விலைவாசி உயர்வால் உண்ண உணவின்றி தவிக்கின்றனர். குறைந்த சம்பளத்துடன் மேலதிக வருமானம் அற்ற மலையகத் தமிழர்களே இவ்விலைவாசி உயர்வால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்.
இந்நிலையில் இந்த ஆட்சியின் தலைவர் 100 வீதம் மானியம் தரப்போவதாகக் கூறியிருப்பது மிகவும் வேடிக்கையானது. 1 கிலோ அரிசி 80 ரூபாவிற்கும் ஒரு கிலோ மா 90 ரூபாவிற்கும் ஒரு தேங்காய் 45 ரூபாவிற்குமென எல்லா அத்தியாவசியப் பொருட்களையும் அதிகூடிய விலையில் விற்கும் நிலையை ஏற்படுத்தி விட்டு வெறும் 100 ரூபாவை கொடுத்து அரசு மக்களை ஏமாற்ற நினைக்கிறது.
எமது மக்கள் ஏமாறப் பிறந்தவர்கள் அல்ல. அவ்வாறே எவரையும் ஏமாற்றியவர்களும் அல்ல. ஆனால், இவர்கள் ஏமாற்றிப் பிழைக்கவும் நினைக்கும் ஒரு கூட்டம் தொடர்ந்தும் எம்மோடு இருப்பது இனியும் கூடாது. எனவே, நாட்டில் யுத்தத்தை இல்லாது செய்து விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா இன மக்களும் நிம்மதியாக வாழும் சூழ்நிலை ஏற்படவேண்டும்.