சர்வமதத் தலைவர்கள் மாநாட்டில் பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பர்
திருகோணமலை நிருபர்
இலங்கை, ஜப்பான், அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம், கம்போடியா, பாகிஸ்தான், நோர்வே,சீனா, மற்றும் தெற்காசிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வமதத் தலைவர்கள் அடங்கிய குழு ஒன்று எதிர்வரும் 28 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதிவரை இங்கு நடைபெறவிருக்கும் சர்வமதத் தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றவுள்ளனர்.
முதலாவது மாநாடு 28 ஆம் திகதி கண்டி ஆளுநர் பணிமனையிலும், அடுத்த மாநாடு திருகோணமலை கிளப் ஓஷியானிக் ஹோட்டலில் 30 ஆம் திகதியும் நடைபெறவிருப்பதாக இலங்கைத் தேசிய சமாதானப் பேரவையின் பிரிவு இணைப்பாளர் சமன் செனவிரத்தின தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெறும் மாநாட்டில் மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் உட்பட அனைத்து சமயத் தலைவர்களும் பங்குபற்றுவர்.
இலங்கையின் நிலையான சமாதானத்திற்காக மதத் தலைவர்களுக்கிடையில் அந்நியோன்ய சகவாழ்வைக் கட்டி எழுப்புவதே இம்மாநாட்டின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாநாட்டில் கிழக்கு மாகாணத்தின் தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் நிலையான சமாதானத்தைக் கட்டி எழுப்புவதில் இலங்கை சர்வமத தலைவர்களின் பொறுப்புக்கள் பற்றி இம்மாநாடுகளில் விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.
திருகோணமலையில் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வமதத் தலைவர்கள் மாநாட்டிற்கான பூர்வாங்க கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 18 ஆம திகதி மாலை திருமலை சர்வோதய மத்திய நிலையத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.