வாழ்க்கைச் செலவு மேலும் மோசமாக அதிகரிக்கும் அபாயம்
உலக சந்தையில் எரிபொருள், உணவுப்பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், உள்நாட்டில் மோதல்கள் உக்கிரமடைந்திருப்பதாலும் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பால் மக்கள் மோசமாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த மூன்று வருடங்களாக உலக சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகள் மோசமாக அதிகரித்து செல்கின்றன. மசகெண்ணெயின் விலையும் நேற்று முன்தினம் பீப்பாய் 112 டொலராக உயர்வடைந்திருக்கிறது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் பணவீக்கம் 20 சதவீதத்திலும் அதிகமாக உள்ளது. மக்களின் அன்றாட அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசியின் விலை கடந்த மாதங்களில் இருமடங்காகிவிட்டது. சம்பா அரிசி கிலோ 100 ரூபா தொடக்கம் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நவம்பரில் 48 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட சம்பா அரிசி இப்போது 100 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் விலைகள் கிலோ 100 ரூபாவுக்கும் அதிகமாகவே விற்பனை செய்யப்படுகின்றன. பச்சை மிளகாயின் விலை கிலோ 300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
புத்தாண்டின் பின்னர் எரிபொருட்களின் விலையை மேலும் அதிகரிப்பதற்கான நிர்ப்பந்தத்தில் அரசாங்கம் உள்ளது. மின்சாரக் கட்டணங்கள் ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளன.
இவற்றைவிட அரசாங்கத்தின் யுத்த செலவினம் மேலும் அதிகரித்துச் செல்லும் நிலைமையே காணப்படுகிறது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு செலவுக்காக அரசு 167 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்திருந்தது.
ஆனால், ஏற்கனவே 10 பில்லியன் ரூபாவால் பாதுகாப்பு செலவினம் அதிகரித்திருப்பதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பாதுகாப்பு நிலைவரத்தால் மக்களின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டமை, மழை, வெள்ளத்தால் பயிர்ச்செய்கை நாசமடைந்தமை, போக்குவரத்து செலவு அதிகரிப்பு; எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள சேவைக்கட்டண உயர்வுகள் என்பன பொருளாதார ரீதியில் மோசமான பின்னடைவை ஏற்படுத்துமென பொருளியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
நடப்பு வருட பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்குமென மத்திய வங்கி அறிவித்திருக்கின்ற போதும் சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி என்பனவற்றின் மதிப்பீடுகள் எதிர்மாறானதாக காணப்படுகின்றன.
இதேவேளை, கடந்த 6 மாதங்களாக வங்கிகளின் திரவத்தன்மையை அதிகரிப்பதற்கு அதாவது பணம் அதிகளவு கிடைப்பதற்குரிய நடவடிக்கைகளை மத்திய வங்கிகள் பல மேற்கொண்டிருக்கின்றன என்ற சந்தேகத்தை உலக வங்கி அதிகாரி ஒருவர் வெளியிட்டிருக்கிறார். இதுவும் உணவுப் பொருட்கள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துமென ராய்ட்டருக்கு அளித்த பேட்டியில் உலக வங்கியின் வறுமை ஒழிப்பு, பொருளாதார முகாமைத்துவத்திற்கான பணிப்பாளர் மார்சிலோ கியூகலே தெரிவித்திருக்கிறார்.