பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
வளர்முக நாடுகளின் ஒரு பிரதான கல்விப்பிரச்சினை, பாடசாலைகளில் சேரும் பிள்ளைகள் கல்வியை முடிக்காது இடையில் விலகி விடுவதாகும். இதனால், இலங்கை தவிர்ந்த பல தென்னாசிய, மற்றும் ஆபிரிக்க நாடுகள் ஒன்பது ஆண்டுகாலக் கட்டாயக் கல்வியை வழங்க முடியாதுள்ளது. இவ்வாறான இடையில் விலகும் பிரச்சினை மேலை நாடுகளின் பாடசாலைக் கல்வி முறையில் இல்லை. ஆயினும், பல்கலைக்கழகக் கல்வி நிலையில் பல மேலை நாடுகள் மாணவர்கள் இடையில் விலகும் பிரச்சினையை எதிர்நோக்குகின்றன.
ஐக்கிய அமெரிக்காவில் 42% மாணவர்களும் ஜெர்மனியில் 27% மாணவர்களும் பிரித்தானியாவில் 22% மாணவர்களும் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர முடியாது இடையில் விலகுகின்றனர் என்பது அண்மைக்காலத் தகவல்; இலங்கையில் பல்கலைக்கழக மட்டத்தில் இடையில் விலகல் ஒரு பிரச்சினையாக இனங் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் கடந்த 50 ஆண்டுகாலமாக உயர்கல்வி நன்கு விரிவுபெற்று வருகின்றது. டொனி பிளயர் (1999) 2010 ஆம் ஆண்டில் 30 வயதுக்குக் குறைந்தவர்களில் 50% இளைஞர்கள் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்ற இலக்கினைப் பிரகடனப்படுத்தினார். 2000 ஆம் ஆண்டில் இளைஞர்களில் 39% மாணவர்களும் தற்போது 42% மாணவர்களும் உயர்கல்வி நிலையங்களில் சேர்ந்து பயில்கின்றனர்.
உயர்கல்வி பயில்வதற்குப் பெரிதும் ஊக்கம் வழங்கப்படுவதால், பிரித்தானியாவில் உயர்கல்வி பெற முறையான ஆயத்தம் பெறாதவர்கள், உயர்கல்வி நிறுவனங்களில் சேர்கின்றனர். இவர்களே இடையில் விலகுகின்றனர் என்பது அவதானிகள் கருத்து. பாடசாலைகளில் வழங்கப்படும் பயிற்சி போதாமையினால் பல மாணவர்கள் நூல்களை வாசித்து விளங்கிக்கொள்ளும் ஆற்றல் அற்றவர்களாக விளங்குகின்றனர். விரிவுரைகளின் மையப் பொருளையும் விளங்கிக் கொள்வதில்லை; ஆங்கில இலக்கணத்திலும் பயிற்சி போதாது என மாணவர் பற்றிப் பல விமர்சனங்கள் உண்டு.
பிரித்தானியாவில் எந்தெந்தப் பாடத்துறையில் இடைவிலகல் அதிகம் என்றும் கண்டறிந்துள்ளனர். கணிதம், கணினிக் கல்வித்துறையில் 11.9%, பொறியியல் 11.7%, வியாபாரக் கற்கைகள் 11.1%, கட்டிடக் கலை 10.7%, விலங்கு மருத்துவம் 10.6% என இடைவிலகல் பட்டியல் நீண்டு செல்கின்றது. ஆயினும், ஜப்பானில் 92% மாணவர்களும் அயர்லாந்தில் 84% மாணவர்களும் பட்டப்படிப்பை முடித்துக் கொள்வதால், இவ்விடயத்தில் இவ்விரு நாடுகளும் முன்னணியில் நிற்கின்றன.
மாணவர்கள் இடையில் விலகுவதால் பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. அவை மாணவர்களின் தொகையின் அடிப்படையிலேயே நிதியை அரசிடமிருந்து பெறுகின்றன. மாணவர்கள் பெருமளவில் விஞ்ஞானத்துறைகளில் இடையில் விலகுவதால் பல்கலைக்கழகங்கள் அதிக அளவில் நிதிப் பிரச்சினைக்குள்ளாகி உள்ளன. ஒரு விஞ்ஞான மாணவன் இடையில் விலகும்போது பவுண்ஸ் 13,684 உம் கலைப்பிரிவு மாணவன் விலகும்போது பவுண்ஸ் 2,521 உம் இழப்பு ஏற்படுகின்றது. பல பல்கலைக்கழகங்கள் நட்டத்தில் இயங்குகின்றன. மான்செஸ்டர் பல்கலைக்கழகம் பவுண்ஸ் 12 மில்லியன் நட்டத்திலும் நொட்டிங்காம் டிரென்ட் பல்கலைக்கழகம் பவுண்ஸ் 7.4 மில்லியன் நட்டத்திலும் (2006-2007) இயங்குகின்றன.
மற்றொரு முக்கிய அம்சம், மாணவர் தெரிவில் கடுமையான நிபந்தனைகளைப் பின்பற்றும் பல்கலைக்கழகங்கள் இடைவிலகல் பிரச்சினை மிகவும் குறைவு.
உதாரணமாக, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவர்களில் 1.4% மாணவர்களே இடையில் விலகுகின்றனர்.
மாணவர் தொகை அதிகரிக்க அதிகரிக்க ஆசிரியர் - மாணவர்களுக்கிடையிலான மனித தொடர்புகள் குறைகின்றன. இதுவும் இடைவிலகலுக்கு ஒரு முக்கிய காரணமாகும். ஆங்கிலப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் கிழமைக்கு 14 மணிநேரமே விரிவுரைகளுக்கு (Contact hours) சமுகமளிக்கின்றனர். பிற ஐரோப்பிய நாடுகளில் இவ்விரிவுரை நேரங்கள் மிக அதிகம். ஜெர்மனியில் 34 மணித்தியாலம், பிரான்சில் 35 மணித்தியாலம், போர்த்துக்கல் நாட்டில் 41 மணித்தியாலம், ஆசிரியர்களுடனான இடைத்தொடர்புகள் குறைவாக இருப்பது இடைவிலகலுக்கான ஒரு பிரதான காரணமாகக் கூறப்படுகின்றது. அவர்களுக்குக் கற்பிப்பவர்கள் சிரேஷ்ட பேராசிரியர்கள் அல்ல; பெரும்பாலும் கலாநிதிப்பட்ட மாணவர்களே கற்பிக்கின்றனர். அவர்கள் கூட தமது ஆய்வுப்பணியிலேயே அதிக அக்கறை செலுத்துகின்றனர்.
இப்பின்புலத்தில், இடைவிலகலைக் குறைக்கும் நடவடிக்கைகளில் பல்கலைக்கழகங்கள் ஈடுபட்டுள்ளன. இடைவிலகல் காரணமாக அரசாங்கத்துக்கு பவுண்ஸ் 450 மில்லியன் இழப்பு (ஆண்டுக்கு) ஏற்படுகின்றது. உயர்கல்விக்கான நிதி வழங்கும் பேரவை இப்பிரச்சினை பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்கள் இலகுவாகப் பயணஞ் செய்ய வாகன ஏற்பாடுகள், மாணவர்களின் மன அழுத்தத்தைக் கண்டறிந்து ஆலோசனை கூற வசதி செய்யும் மென்பொருள் பயன்பாடு, இடைவிலகலைத் தடுப்பதற்கான விசேட நிதி ஒதுக்கீடு, வசதியான வளாகங்களை நிர்மாணித்தல் என்பன மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கற்கைநெறிகளை இரண்டாண்டு காலத்துக்கு மட்டும் என சுருக்கியமைப்பது பற்றியும் ஆலோசிக்கப்படுகின்றது. இதனால், மாணவர்களின் கல்விச் செலவும் கல்விக்கான கடனும் குறைய வாய்ப்பு உண்டு.
பாடசாலையில் கற்கும் காலத்தில் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி பெறுவதற்கான சரியான பயிற்சி வழங்கப்படல் வேண்டும்; இளைஞர்களில் 50% மாணவர்களுக்கு உயர்கல்வி என்று இலக்குகளை ஏற்படுத்தக்கூடாது என்று வேறு பல ஆலோசனைகளும் கூறப்படுகின்றன.