Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 15, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
தண்ணீருக்குத்தான் அடுத்த உலகப்போர்?
[15 - April - 2008] [Font Size - A - A - A]
உதயை மு.வீரையன்

நதிகள் இணைப்பை தேசியத் திட்டமாக அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்று தலைநகர் டில்லியில் நடைபெற்ற 54 ஆவது தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி வலியுறுத்தினார்.

நதிகள் இணைப்பை தேசியத் திட்டமாக அறிவிப்பதோடு அதை நிறைவேற்றுவதற்கு காலக்கெடுவை நிர்ணயித்து அட்டவணை வெளியிட வேண்டும். நதிகள் இணைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இன்னும் காலதாமதம் செய்தால் அது நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.

நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக மாநிலங்களுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய காலத்தில் தீர்வு காணப்படாவிட்டால் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஊறு நேர்வதைத் தவிர்க்க இயலாது என்பதும் உண்மையே!

இப்போது தமிழ்நாடு மும்முனைத் தாக்குதலைச் சமாளித்துக் கொண்டுள்ளது. காவிரி நீருக்காக கர்நாடகம், முல்லைப்பெரியாறு அணை நீருக்காக கேரளம், பாலாற்று நீருக்காக ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களுடன் மோதும் நிலை உருவாகியுள்ளது. தண்ணீருக்காகப் பக்கத்து மாநிலங்களின் தயவுவேண்டிக் கவலையுடன் காத்திருக்க வேண்டிய பரிதாபம்: இதுவே முதல்வரின் பேச்சுக்கான காரணம்.

`நீர் இன்றி அமையாது உலகு' என்று பாடினார் திருவள்ளுவர். உலகத்தின் இயக்கம் தண்ணீரையே அடிப்படையாகக் கொண்டது. ஒரு தேசத்தின் பண்பாடும் நாகரிகமும் தண்ணீரையே ஆதாரமாகக் கொண்டது. உலக நாகரிகங்கள் எல்லாம் நதிக்கரை ஓரமே உருவானதற்குக் காரணம் இதுவே.

இதற்கும் இப்போது தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வளங்கள் குறைகின்றன. வரட்சிகள் வளர்கின்றன. நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடுகள் இல்லை. இதில் ஏழைகள், செல்வந்தர்கள் என்ற பேதங்களும் இல்லை. தண்ணீரைத் தேடி அலையாதவர்களும் இல்லை.

`பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கக் கூடாது' என்ற பழைய மொழி வழக்கொழிந்து போனது. தண்ணீரை பணத்தைப்போல சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும் என்ற புதிய மொழி நடைமுறைக்கு வந்துவிட்டது. காரணம் என்ன? மனிதன் இயற்கையைப் புறக்கணிக்கத்ததன் விளைவுகள்!

காடுகள் அழிக்கப்படுவது, மழைநீரைத் தேக்கி வைக்காமல் வீணாக்குவது, ஆற்றுநீரை ஆலைக் கழிவுகளால் அசுத்தப்படுத்துவது, ஊருக்குள் இறால் பண்ணைகளையும் உப்பளங்களையும் உருவாக்கி நிலத்தடி நீரை மாசுப்படுத்துவது, சுற்றுச் சூழல் இயக்கங்களின் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்வது போன்ற பல்வேறு காரணங்களால் நீர் ஆதாரங்கள் குறைந்துகொண்டே போகின்றன.

ஆனால், நீரைப் பயன்படுத்தும் மக்கள் தொகை பன்மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கிறது. இந்தத் தலைகீழ் விகிதமே தண்ணீர்ப் பஞ்சத்திற்கான காரணம்.

அக்காலத்தில் தமிழ் மன்னர்கள் நீர்வளம் பெருக்கி நிலவளம் காப்பதையே குடிமக்களுக்குச் செய்யும் கடமையாகக் கொண்டிருந்தனர். குளங்கள், ஏரிகள், கால்வாய்கள் என்னும் நீர்பாசனத் திட்டங்கள் எல்லாம் அரசர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டவையே. கரிகாலன் புகழ் பெற்ற கல்லணையைக் கட்டியதற்கும் காரணம் இதுவே.

`காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கி...' என்று பட்டினப்பாடலை பாடுகிறது. வரலாற்றுச் சின்னங்களாக இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பன அவர்களின் கோட்டை கொத்தளங்களும் கோட்டைகளைச் சுற்றி அவர்கள் உருவாக்கிய ஆழமான அகழிகளும்.

பகைவரிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காகவும் பகைவர்கள் முற்றுகை இடும் காலங்களில் தங்களுக்கு வேண்டிய தண்ணீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவும்தான் அவற்றை அவர்கள் ஏற்படுத்தினர்.

இன்றும் பண்பாட்டுப் பாசறைகளாகத் திகழ்வன கோயில்களே! ஊருக்கு நடுவே கோயில்களும் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு குளம் மற்றும் தெப்பக்குளம். அந்தக் குளங்களுக்கு நடுவே கிணறுகள் இவையனைத்துமே நீர் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை.

இவ்வாறு பராமரிக்கப்பட்டு வந்த நீர் ஆதாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தன. காலப்போக்கில் ஏரி, குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. பாசன வாய்க்கால்கள் பராமரிப்பின்றி தூர்ந்தன. வயல்வெளிகள் வீட்டு மனைகளாயின.

இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளப் பெருக்கானது. மக்களையும் வீடுகளையும் பயிர்களையும் அழித்துவிட்டு யாருக்கும் பயன் இன்றி கடலில் நீர் சென்று கலக்கிறது. இப்போதும் இந்த நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

அண்மையில் பெய்த பெருமழை காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபா ஒரு இலட்சம் வீதம் நிவாரணம் வழங்கப்பட்டது.

இவற்றையெல்லாம் கூறுவதற்குக் காரணம் என்ன? ஆண்டுதோறும் மழையும் வருகிறது. வெள்ளமும் வருகிறது. அதன் பிறகு வரட்சியும் வருகிறது. மழைகாலத்தில் மக்களுக்கு வெள்ளத்தால் துயரம். கோடைக்காலத்தில் தண்ணீர் இல்லாமல் துயரம். இதனைச் சரிசெய்ய திட்டம் வேண்டாமா?

தண்ணீருக்காக நதிநீர் இணைப்புத் திட்டங்களைத் தேடுகிற நாம் கிடைக்கிற நீரைத் தேக்கி வைத்துக்கொள்ள வேண்டாமா? மழைகாலங்களில் வெள்ளநீர் வீணாகக் கடலில் கலந்துவிடாமல் தடுத்து தேக்கி வைத்தால் பயிர்களையும் பாதுகாக்கலாம். உயிர்களையும் பாதுகாக்கலாம்.தண்ணீர்ப் பஞ்சத்தையும் தடுக்கலாம்.

வரட்சி நிவாரணங்களுக்கும் வெள்ள நிவாரணங்களுக்கும் வேலையில்லை. இதனால் கோடிக்கணக்கில் பணம் மிச்சமாகும். அதனைக் கொண்டு மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை நிறைவேற்றலாம். இழப்பீடு கேட்டு மத்திய அரசிடம் கையேந்த வேண்டிய அவசியமும் ஏற்படாது. இதுபற்றிய சிந்தனையே இப்பேது அவசர அவசியத் தேவை.

`மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்' என்று தண்ணீரின் புகழ் பாடியது சிலப்பதிகாரம். `வான் சிறப்பு' என்று மழையைப் போற்றியது திருக்குறள். மழைநீர் சேமிப்புத் திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதுமா? அரசு தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டாமா?

உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பவனுக்குத் தேவை உபதேசமல்ல. உடனடி மருத்துவம். எங்கும் எரியும் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் அடுத்த உலகப் போர் தண்ணீருக்குத்தான் என்ற விஞ்ஞானிகளின் எச்சரிக்கை உண்மையாகிவிடும்.

தினமணி

Email this page Your Opinion Print this page
காலநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றமும் கியோட்டோ ஒப்பந்தம் குறித்த அழுத்தமும்
தண்ணீருக்குத்தான் அடுத்த உலகப்போர்?
பிரித்தானியப் பல்கலைக்கழகங்களில் மாணவர் இடைவிலகல் பிரச்சினை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com