Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 15, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
காலநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றமும் கியோட்டோ ஒப்பந்தம் குறித்த அழுத்தமும்
[15 - April - 2008] [Font Size - A - A - A]
பூமி வெப்பமடைவதை கட்டுப்படுத்துவதற்கு புதிய திட்டமொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் பாங்கொக்கில் ஆரம்பமான போது உலகின் செல்வந்த நாடுகளே பூமி வெப்பமடைவதற்கு காரண கர்த்தாக்களாக இருக்கின்றன என்று வளர்முக நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன. பூமியின் எதிர்காலம் கைத்தொழில்மய நாடுகளின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது என்று வளர்முக நாடுகள் தெரிவித்தன.

கைத்தொழிற் புரட்சி இடம்பெற்ற காலத்திலிருந்து பூமியின் சுற்றாடலை அபிவிருத்தியடைந்த நாடுகளே கூடுதலாக மாசுபடுத்திவருகின்றன என்ற கருத்திலிருந்து எழுந்துள்ள இந்தக் கண்டனத்தினால் 1997 ஆம் வருட கியோட்டோ ஒப்பந்தத்தின் கீழ் அளிக்கப்பட்ட ஆரம்ப வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் பார்க்க அவற்றை தாமதப்படுத்தும் தந்திரத்தை அபிவிருத்தியடைந்த நாடுகள் கடைப்பிடிக்கலாம்.

காலநிலை மாற்றம் தொடர்பான 1992 ஆம் வருட ஐக்கிய நாடுகள் வரையறை சாசனத்திற்கு வலுவளிக்கக்கூடியதாக சேர்த்துக்கொள்ளப்பட்ட சுற்றாடல் உடன்படிக்கையான இந்த ஒப்பந்தத்தின்படி 37 கைத்தொழில் மய நாடுகளும் ஐரோப்பிய சமூகமும் 2012 ஆம் ஆண்டளவில் பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தை 5 சதவீதத்தினால் குறைக்க இணக்கம் தெரிவித்திருந்தன. ஆனால், பெரும்பாலும் ஐரோப்பிய சமூகத்தைச் சேர்ந்த மிகச் சில நாடுகளே இந்த உறுதிமொழியை நிறைவேற்றியுள்ளன.

அபிவிருத்தியடைந்த நாடுகள் அளித்த வாக்குறுதியை அவை நிறைவேற்ற வேண்டும். கியோட்டோ ஒப்பந்தத்தை அங்கீகரித்த நாடுகள் முதலில் அவற்றின் இலக்கை எய்த வேண்டும். இவ்வாறு 77 நாடுகளின் குழுவின் தலைமை நாடும் சீனாவும் ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்துள்ளன. புதிய பிரச்சினைகள் கொண்டுவரப்படக்கூடாது என்றும் இவை தெரிவித்தன.

2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலியில் நடைபெற்ற காலநிலை மாற்ற மகாநாட்டில் கைத்தொழில்மய நாடுகள் அவற்றின் பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தை குறைக்கவேண்டியதன் அவசியம் குறித்து இணக்கம் காணப்பட்டது என்று அன்ரிகுவா, பர்புடா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் தெரிவித்தனர். பர்புடா தலைமை தாங்கும் 77 நாடுகள் குழுவில் ஆபிரிக்கா, ஆசியா, லத்தின் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களைச் சேர்ந்த 130 வளர்முக நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கைத்தொழில்மய நாடுகள் தேசிய நடவடிக்கைகள் மூலம் அவற்றின் வாக்குறுதிகளை நிறைவேற்ற போதிய நடவடிக்கைகளை எடுக்காதமை குறித்து இத்தூதுவர்கள் கவலை தெரிவித்தார்கள்.

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வரை நடைபெறும் பாங்கொக் காலநிலை மாற்ற மகாநாடு இரண்டு சுற்றுக்களை கொண்டது. முதலாவது சுற்று அபிவிருத்தியடைந்த நாடுகளின் வாக்குறுதிகள் சம்பந்தப்பட்டது. மற்றையது, கியோட்டோ ஒப்பந்தத்தில் பங்குகொள்ளாத அமெரிக்கா அதன் வாயு வெளியேற்ற குறைப்பை நிறைவேற்றுவது சம்பந்தமானது. சகல நாடுகளும் கலந்துகொள்ளும் இரண்டாவது சுற்று சம்பந்தமான பேச்சுவார்த்தைகள், 2012 ஆம் ஆண்டு கியோட்டோ ஒப்பந்தம் காலாவதியான பின்னர் ஆரம்பமாகும். பூமி துரித வெப்பமடைதல் தடுப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட இருக்கும் ஐக்கிய நாடுகள் மகாநாடு 2009 ஆம் ஆண்டு கொப்பன்ஹேகனில் நடைபெறும் போது இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெறும். நாங்கள் இப்பொழுது காலநிலை மாற்ற நடைமுறையின் அலுவல்கள் மிகவும் நிறைந்த ஒன்றரை வருட காலப் பகுதியின் ஆரம்பத்தில் இருக்கிறோம். இது சம்பந்தமான எதிர்பார்ப்புகளுக்கு பதிலளிக்க வேண்டியவர்களாகவும் இருக்கிறோம் என்று காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் வரையறை சாசனத்தின் நிறைவேற்று செயலாளர் வியோ டீ போர் திங்கட்கிழமை பேச்சுவார்த்தைகள் ஆரம்பமான போது தெரிவித்தார். கொப்பன்ஹேகனில் இணக்கப்பாடு ஒன்றுடன் பேச்சுவார்த்தைகள் முடிவடைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

163 நாடுகளைச் சேர்ந்த 1,100 பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் பாங்கொக் மகாநாட்டில் டீ போர் தெரிவித்த மிகவும் `சிக்கலான பேச்சுவார்த்தைகள்' என்ற நிலைப்பாடே நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த நடைமுறையில் காணப்படும் பெரியதொரு வாய்ப்பு என்னவென்றால் ஒளிவுமறைவற்ற தன்மையே சகல அரசாங்கங்களும் பேச்சு மேசையில் அமர்ந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

கொப்பன்ஹேகனில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் நான்கு முக்கிய அம்சங்கள் இடம்பெறவிருக்கின்றன. அவையாவன பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கான மனித முயற்சிகள், பூமி வெப்பமடைவதனால் ஏற்படும் அழிவுகளை சமாளிக்க நாடுகளுக்கு உதவுதல், பொருளாதார வளர்ச்சிக்கான முன்னேற்றகரமான தொழில்நுட்பங்கள், வளர்முக நாடுகள் காலநிலை மாற்றத்திற்கேற்ற நடவடிக்கைகளை எடுப்பதற்காக அவற்றுக்கு நிதியுதவியை செய்தல்

புதியதொரு உலக உடன்படிக்கைக்கான விரிவான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கங்கள் தவறினால் உலகில் பேரழிவுகள் ஏற்படுமென சர்வதேச குழுவொன்று மேற்கொண்ட ஆய்வு தெரிவித்துள்ளது. உலகின் மிக வறிய பிரதேசங்களும் ஆபிரிக்க, ஆசிய பிராந்தியங்களையும் சிறு தீவு நாடுகளையும் சேர்ந்த பல கோடி மக்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள்.

பாலியில், வளர்முக நாடுகள் அவற்றின் பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கு தேசிய நடவடிக்கைகளை எடுக்க இணக்கம் தெரிவித்து பேரழிவை தவிர்க்க உதவுவதாக உறுதியளித்தன. இதற்கு பதிலாக செல்வந்த நாடுகள் தங்களுக்கு சுற்றாடல் பேணலில் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதுடன் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்த நிதியுதவியும் வழங்க வேண்டுமென வளர்முக நாடுகள் கேட்டுக் கொண்டன.

இந்த தகவல் இங்கு வலுவடைந்துள்ளது. வளர்முக நாடுகள் அவற்றின் மக்களுக்கு சிறந்த தர வாழ்க்கையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தை குறைத்து வறுமையை ஒழிப்பதிலும் தங்கள் பங்களிப்பைச் செய்வதானால் அபிவிருத்தியடைந்த நாடுகளின் நிதியுதவி அவசியமாகும் என்று தெற்காசிய பிரதிநிதி ஒருவர் ஐ.பி.எஸ்ஸிடம் தெரிவித்தார். நீண்டகால ஒத்துழைப்பு குறித்து தாங்கள் பேசுவதாகவும் அதற்கு முன்வருவோர் அவர்களது முன்மாதிரியை செயலில் காண்பிக்க வேண்டுமெனவும் அந்த பிரதிநிதி தெரிவித்தார்.

காலப்போக்கில் கைத்தொழில்மய நாடுகள் மேலதிக வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன் வளர்முக நாடுகளுக்கான மேலதிக நிதியளிப்பு, தொழில்நுட்ப மாற்றம், ஆற்றல் விருத்தி ஆகியவற்றுக்கான கடப்பாடுகளையும் மதித்து நடக்கும் வரை வளர்முக நாடுகளினால் இலக்குகளை எய்த முடியாதிருக்கும் என்று இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தையின்போது வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு கட்ட அணுகுமுறை இந்தவார மகாநாட்டில் கலந்துகொண்ட சுற்றாடல் அமைப்புக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. முதற் கட்டத்தை யாரோ ஒருவர் முன்னெடுக்க இருக்கிறார் என்று உலக வனவிலங்கு நிதியத்தின் இந்திய அலுவலக அதிகாரியான சுறூதி சுக்ளா தெரிவித்தார்.

அபிவிருத்தியடைந்த நாடுகள் அவற்றின் கியோட்டோ உடன்படிக்கை தொடர்பாக தெரிவித்த வாக்குறுதிகள் குறித்து உறுதியான நிலைப்பாட்டில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். பூமி வெப்பமடைவது தொடர்பாக அந்நாடுகள் எடுக்கும் முதலாவது நடவடிக்கை இதுவாகும். எனினும், அவை முன்னேற்றத்தை காண்பிப்பதாக இல்லை என்று அவர் தெரிவித்தார்.

இந்த முயற்சி பொருளாதார வளர்ச்சி மீதான யுத்தமல்ல என்று தெரிவித்த டீ போர் இது கார்பன் வெளியேற்றம் மீதான யுத்தம் என்று கூறினார். சுற்றாடல் அபிவிருத்தியை பொருளாதார ரீதியில் மேற்கொள்ளக்கூடியதாக எதிர்காலத்தில் அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

ஐ.பி.எஸ்.

Email this page Your Opinion Print this page
காலநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றமும் கியோட்டோ ஒப்பந்தம் குறித்த அழுத்தமும்
தண்ணீருக்குத்தான் அடுத்த உலகப்போர்?
பிரித்தானியப் பல்கலைக்கழகங்களில் மாணவர் இடைவிலகல் பிரச்சினை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com