இத்தாலியில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்புகள் ஆரம்பமாகியுள்ளன.
கடந்த ஜனவரியில் பாராளுமன்ற செனட் சபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ரொமனோ புரூடி தோற்கடிக்கப்பட்டார். இத்தாலி அரசியல் சட்டப்படி புதிய அரசு 70 நாட்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால், ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் தேர்தல் நடத்தப்படுகிறது.
இத்தாலிய தேர்தல் முறைகளில் இருக்கும் குளறுபடிகளால் நிலையான அரசு அமைவது அபூர்வம். புரூடியின் அரசுகூட இரண்டு ஆண்டுகள்தான் பதவியில் இருந்தது. கடந்த 63 ஆண்டுகளில் நடக்கும் 62 ஆவது பொதுத் தேர்தல் இதுவாகும்.
நொடிந்து கிடக்கும் பொருளாதாரத்தை வலுவாக்குவதே இப்போதைய தேர்தலில் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.
தொழிலதிபரும் இரண்டுமுறை பிரதமராக இருந்தவருமான சில்வியோ பெர்லஸ்கோனி தலைமையிலான கூட்டணியும் ரோமின் முன்னாள் மேயர் வால்டர் வெல்ட்ரோனி தலைமையிலான கூட்டணியும் தேர்தலில் நேரடியாக மோதுகின்றன. வால்டர் வெல்ட்ரோனியின் கட்சியின் தலைவராக முன்னாள் பிரதமர் புரூடி இருக்கிறார். அவர் இந்தத் தேர்தலில் பிரதமர் பதவிக்குப் போட்டியிடவில்லை.
வரலாற்றுச் சிறப்புமிக்க நேப்பிள்ஸ் நகர் முழுவதும் குப்பைகள் நிறைந்து கிடக்கும் பிரச்சினையை பெர்லஸ்கோனியின் கட்சியினர் பிரசார ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.