பிரிட்டன் இளவரசர் ஹரி தனது காதலியைத் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதுடன் இது குறித்து காதலியின் பெற்றோரிடமும் அவர் நேரடியாகப் பேசியுள்ளார்.
பிரிட்டன் இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹரி. தற்போது இவருக்கு 23 வயதாகிறது. இவரது சகோதரர் இளவரசர் வில்லியம். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இளவரசர் ஹரியின் 22 வயது காதலி செல்சி டாவி.
சிம்பாப்வேயைச் சேர்ந்த கோடீஸ்வரர் சார்லஸ் டாவி- பேவர்லி ஆகியோரின் மகள். கல்லூரியில் அரசியல் பாடம் படித்து வருகிறார். ஹரி- செல்சி ஜோடி பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து காதலை வளர்த்து வந்தனர்.
இராணுவப் பயிற்சி பெற்ற ஹரி சில மாதங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டன் படையில் பணியாற்றினார். காதலியை விட்டு ஹரி எப்படி போர்முனைக்கு வந்தார் என்று இராணுவ வீரர்கள் வியப்படைந்தனர். உடன் பணியாற்றிய இராணுவ வீரர்களிடம் ஹரி கால்பந்து பற்றித்தான் அடிக்கடி பேசி வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் தென்னாபிரிக்காவில் உள்ள கேப்டவுனில் நட்சத்திர ஓட்டலில் செல்சியின் பெற்றோரை ஹரி நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அவர்களது மகளைத் திருமணம் செய்ய விரும்புவதாக ஹரி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.