`ஹரிபொட்டர்' என்ற கற்பனைப் பாத்திரம் யாருக்கு சொந்தமென்பதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுக் கொண்டுள்ளது.
1986 ஆம் ஆண்டு `ட்ரோல்' என்ற திரைப்படம் வெளியானது. ஜோன் ப்யூச்லர் என்பவரது இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் ஹரிபொட்டர் ஜூனியர் என்ற சிறுவன் கதாபாத்திரம் படைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே 1990 களின் மத்தியில் ஜே.கே.ரௌலிங் என்ற பெண் எழுத்தாளர் ஹரிபொட்டர் நாவலை எழுதி வெளியிட்டார்.
இந்தப் புத்தகம் பரபரப்பாக விற்பனையாகவே இந்த நாவலை படமாக்கும் உரிமையை `வார்னர் பிரதர்ஸ்' நிறுவனம் பெற்றது.
ஜே.கே. ரௌலிங்கின் நாவல்கள் பல பகுதிகளாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது போல அதை மையமாக வைத்து வார்னர் பிரதர்ஸ் தயாரித்த திரைப்படங்களும் வசூலைக் குவித்தன.
இந்த நிலையில் தனது `ட்ரோல்' படத்தை மீண்டும் உருவாக்க (ரீமேக்) ஜோன் அறிவித்தார். இது வார்னர் நிறுவனத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரிபொட்டர் கதாபாத்திரத்தின் உரிமை தங்களிடம் உள்ளதாகவும் அதனால் ஜோன் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமெனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கிடையே புதிய `ட்ரோல்' படத்தில் ஹரிபொட்டர் வேடத்தில் நடிப்பதற்காக குழந்தை நட்சத்திரத்தை தேடும் பணியில் ஜோன் ஈடுபட்டுள்ளார்.
இந்தப்பணியில் அவருக்கு ஆதரவாக பீட்டர் டேவி என்ற தயாரிப்பாளர் இருக்கிறார். முதல் முதலாக ஹரிபொட்டரை உருவாக்கியது ஜோன் தான் என பீற்றர் டேவி உறுதியாகக் கூறி வருகிறார். அவர் உருவாக்கிய ஹரிபொட்டருக்கும் ரௌலிங் உருவாக்கிய ஹரிபொட்டருக்கும் அநேக ஒற்றுமைகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆனால், ட்ரோல் படத்தை இதுவரை தாம் பார்த்ததில்லை எனக் கூறிவரும் ஜே.கே. ரௌலிங் ஹரிபொட்டர் தனது சொந்தப் படைப்பு என்கிறார்.