* புஷ் அறிவிப்பு
சீனாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப வைபவத்தில் பங்கேற்கும் தனது திட்டத்தில் மாற்றமில்லையென அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் தெரிவித்துள்ளார்.
டெக்ஸாஸில் கடந்த வெள்ளிக்கிழமை தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே புஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.
திபெத் மீதான சீனாவின் ஆதிக்கம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இது அவ்விரு நாடுகளின் உறவில் இலேசான விரிசலையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற நிலையில் சீனாவில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி புஷ் பங்கேற்பது நன்றாக இருக்காதென அமெரிக்க அரசியல் தலைவர்கள், மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
புஷ் கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் அக்கட்சி சார்பாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜோன் மக்கெய்னும் புஷ்ஷின் சீனப் பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். இதுபோன்ற நிலையில் ஜோர்ஜ் புஷ் தனது சீனப் பயணத் திட்டத்தில் மாற்றமில்லை என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
சீனாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் ஆரம்ப விழா அரசியல் நிகழ்ச்சியல்ல. அது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி. ஒலிம்பிக் போட்டியில் ஏராளமான அமெரிக்க வீரர்களும் பங்கேற்கவுள்ளனர். எனவே, ஆரம்ப விழாவில் நான் பங்கேற்பது அவர்கள் அனைவருக்கும் உற்சாகமாகவும் உத்வேகமாகவும் அமையும் என்று நம்புகிறேன்.
அத்துடன், சீன ஜனாதிபதி ஹூ ஜுந்தா வோவை நான் அடிக்கடி சந்தித்து பேசி வருகிறேன். இந்நிலையில் ஒலிம்பிக் விழாவில் கலந்துகொள்வதன் மூலம் மீண்டும் அவரைச் சந்திக்க ஒரு வாய்ப்புக் கிடைக்கும். அதன் மூலம் திபெத்தில் சமய சுதந்திரத்தையும் மனித உரிமையையும் நிலைநாட்ட முயற்சிப்பேன் என்றும் பேட்டியில் புஷ் தெரிவித்துள்ளார்.