பாகிஸ்தானிலுள்ள தீவிரவாதிகள் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தை தீட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இத்தாக்குதல்கள் கடந்த 2001 செப்டெம்பர் 11 இல் நடத்தப்பட்டதைப் போன்று நடைபெறலாமெனவும் புஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி அல்-ஹைடா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நியூயோர்க் நகரில் 111 மாடிகள் கொண்ட இரட்டைக் கோபுர கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். விமானத்தைக் கடத்தி அவற்றை அந்தக் கட்டிடங்களின் மீது மோதச் செய்ததன் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது இந்தத் தாக்குதலுக்கான திட்டம் ஆப்கானிஸ்தானில் தான் தீட்டப்பட்டது. அதை அங்கு வசித்த பின்லேடன் தான் தீட்டிச் செயற்படுத்தினார்.
இந்த நிலையில், அதே பாணியில் மேலும் ஒரு தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி புஷ் தெரிவித்து இருக்கிறார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
பாகிஸ்தானில் தங்கியிருக்கும் தீவிரவாதிகள் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருக்கிறார்கள். முந்தைய தாக்குதலின் பாணியில் இது இருக்கும். தீவிரவாதிகள் திட்டமிட்டால் அதை நிறைவேற்றியே தீருவார்கள். எனவே, அதை எதிர்கொள்ளவும் நடைபெறாமல் தடுக்கவும் அமெரிக்கா தயாராக இருக்க வேண்டும்.
ஆப்கானிஸ்தானில் அல்-ஹைடா இயக்கத்தை சமாளிப்பதற்குப் போதுமான இராணுவ பலம் நம்மிடம் உள்ளது. கூடுதல் இராணுவம் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
ஈரான் அணு ஆராய்ச்சியில் ஈடுபடாமல் தடுப்பதற்காக அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் எண்ணம் அமெரிக்காவுக்கு கிடையாது. இந்த ஆராய்ச்சி மூலம் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் வல்லமையைப் பெற்றுவிட்டது என்பதை உலகத்துக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்காவுக்கு உள்ளது. எனவே, இந்தப் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை வருகிற ஜூலை மாத இறுதியில் ஒரு இலட்சமாகக் குறைக்க வாய்ப்புக் கிடையாது. ஈராக்கில் ஊடுருவும் ஈரான் வீரர்கள் என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது அமெரிக்காவுக்குத் தெரியும். தொடர்ந்து ஈரான் ஈராக்கில் அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவர்களைப் பிடித்துக் கொல்லும் நடவடிக்கையில் அமெரிக்க இராணுவம் ஈடுபடும் எனத் தெரிவித்துள்ளார்.