ஆலையடிவேம்பு பிரதேசத்தில் `நோப்' திட்டத்தின் கீழ் 10 கிராமங்களில் 345 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தில் நிர்மாணிக்கப்படும் வீடுகளில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கடும் விசனம் தெரிவித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதனிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
உள்நாட்டு யுத்தம் வறுமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற ஒவ்வொரு வீடும் தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் விலைவாசி அதிகரிப்பினால் 3 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான முதலாம், இரண்டாம் கட்டக் கொடுப்பனவு வழங்கப்பட்டது. ஆனால், கட்டிடவேலைகள் பூர்த்தி செய்ய முடியாமல் போனதற்கு உரியநேரத்தில் கெடுப்பனவுகள் வழங்கப்படவில்லை எனவும் இதற்கான ஒரு உத்தியோகத்தரை சரியாக நியமிக்கவில்லையென்றும் முறையிடப்பட்டுள்ளது.
காசோலையை வழங்கும் உத்தியோகத்தருக்கு இரண்டாயிரும் ரூபா லஞ்சமாக வழங்க வேண்டியுள்ளதாகவும், இவ்வீடுகளுக்கென தரம் குறைந்த 26 ரூபா பெறுமதியான ஓடுகளை வழங்கிவிட்டு 32 ரூபா எனப் பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது.