மத்திய அரசின் அனுமதி கிடைக்காமல் இருப்பதால் சென்னையில் பிடிபட்ட இலங்கை மீனவர்கள் 10 பேரை விடுவிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
சில தினத்துக்கு முன்பு நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த சென்னை மீனவர்களை தாக்கிவிட்டு அவர்கள் வைத்திருந்த மீன்கள், வலைகள் மற்றும் வயர்லெஸ் கருவிகளை இலங்கை மீனவர்கள் 10 பேர் பறித்தெடுத்தனர். இதன்பின் தப்பி ஓட முயன்ற அவர்களை காசிமேடு மீனவ சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நடுக்கடலில் சுற்றிவளைத்து பிடித்தனர். இதன்பின் சென்னை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை ஆட்சியர் ஜெயா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு முன்பு 10 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். குழுவின் ஆலோசனைக்குப் பிறகு இலங்கை மீனவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து, தமிழக அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
ஆனால், அவர்களை விடுவிக்க கடலோரப் பாதுகாப்பு படையிடம் இருந்து இதுவரை உத்தரவு கிடைக்கவில்லை. இதனால் 10 மீனவர்களை விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் மற்றும் அடிக்கடி கடலில் ஊடுருவல் போன்ற சம்பவத்தால் இச்சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.