* பசறை கூட்டத்தில் எஸ்.பி.திஸாநாயக்கா
இந்த யுத்தத்தால் இராணுவ வீரர்களையும் பொதுமக்களையும் அரசியல் தலைவர்களையும் கொன்று குவிப்பதை நிறுத்தி நிரந்தர சமாதானத்திற்கான பேச்சுகளில் அரசு உடன் ஈடுபட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரான எஸ்.பி.திஸாநாயக்கா தெரிவித்தார்.
பசறை பிரதேசசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பசறைத் தொகுதி பிரதான அமைப்பாளரும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான க.வேலாயுதம் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், மற்றும் இக் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அங்கு திஸாநாயக்கா தொடர்ந்து உரையாற்றுகையில்;
வடக்கு, கிழக்கில் மகிந்த முன்னெடுக்கும் யுத்தத்தினால் எவ்வித பயனும் ஒரு காலமும் எட்டப்போவதில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிக்காமல் இருந்ததற்கு பிரதான காரணம் மகிந்த அரசு முன்னெடுக்கும் கொடூர வன்முறைகளை சர்வதேசத்திற்கு எடுத்தியம்பி தனக்கொரு சாதகமான சூழ்நிலையினை ஏற்படுத்திக்கொள்ளவேயாகும். இதனை அறியாத அரசும், அரசைச் சார்ந்த கட்சிகளும் முட்டாள் தனமாகச் செயற்படுகின்றனர்.
இதற்கு வசதியாகவே மக்கள் விடுதலை முன்னணியினரும் ஹெல உறுமயக் கட்சியினரும் பாதையமைத்துக் கொடுத்துள்ளனர். யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வருவதில் அரசிற்கு எவ்வித விரும்பமுமில்லை. மக்களைக் கொன்று குவித்து அதனைப் பார்த்து ரசிப்பதே இவர்களின் விரும்பம். யுத்தத்தினால் இனப்பிரச்சினை முடிவிற்கு வராது. அதிகாரப் பரவலாக்கல்களின் மூலமே தீர்வு காணமுடியும் என்பதை நான் உறுதியுடன் தெரிவிக்க விரும்புகிறேன்.
இதற்கு உலக நாடுகள் பல உதாரணங்களாக இருக்கின்றன. எப்படித்தான் இந்த அரசிற்கு இதனை தெளிவுபடுத்த முயற்சித்தாலும் அது செவிடன் காதில் ஊதுகின்ற சங்கு போலவே ஆகிவிடுகின்றது. எனவே, யுத்தத்தினால் இலங்கை நாடு மேன்மையடையவும் சாந்தியடையவும் முடியாது. அதிகாரப் பரவலாக்கலின் மூலமே இதனைச் சாதிக்க முடியும். ஆகவே, மூடத்தனமாக ஆயுதங்களை ஏந்தி இராணுவ வீரர்களையும் பொதுமக்களையும் அரசியல் தலைவர்களையும் கொன்று குவிப்பதனை நிறுத்தி இருதரப்பினரும் மீண்டும் பேச்சு வார்த்தை மேசையில் கூடி ஒருமைப்பட்டு கலந்தாலோசித்து நிரந்தர சமாதானத்திற்கும் மக்களின் நிம்மதிக்கும் வழிசெய்ய வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்கு மிகவும் பங்களிப்பு செய்துவரும் ஒரு தொகுதி பசறைத் தொகுதியாகும். இதனை நாம் நன்கு அறிவோம். நாம் வீழ்ந்தாலும் எழுந்தாலும் எமது கட்சியின் இப்பகுதி அமைப்பாளர் க.வேலாயுதம் எம்முடனே இருக்கின்றார். இதுவே பசறைத் தொகுதிக்கு பெரும் சக்தி. இன்று பல மாயாஜால சிந்தனைகளை அரங்கேற்றி அரசு மக்களை பட்டினியில் வாட்டுகின்றது. இதன் பாதிப்பை தோட்டத் தொழிலாளர்களே அனுபவிக்க நேர்ந்துள்ளது.
அடையாள அட்டை இல்லாமல் ஒருவர் வீதியில் நடமாட முடியாது. இதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் குரல்வளையை நசுக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அரசை எதிர்த்து இன்று நாம் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை நடாத்திக்கொண்டு இருக்கின்றோம். சட்டி, பானைகளைப் போட்டு உடைக்கின்றோம் ஏன்? இதனைப் பார்த்தாவது மக்களின் பசியினை அரசு உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவேயாகும் என்றார்.