இறக்குவானை பொதுவைத்தியசாலை நோயாளிகள் விடுதிகள் அனைத்தும் மின்விநியோகம் இன்றி இருட்டில் மூழ்கியுள்ளமையால், நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக கொடக்கவெல பிரதேச சபை உறுப்பினர் முகமது தாவுஸ் தெரிவித்தார்.
கொடக்கவெல பிரதேசபையின் மாதாந்த கூட்டம் அண்மையில் சபையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவைத் தலைவர் வி.ஜீ.மங்கள திஸ்ஸ (ஐ.ம.சு.கூ.) தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;
"இந்த வார்ட்டுக்கள் அனைத்தும் நீண்டகாலமாக இருளில் மூழ்கியுள்ளன. இது குறித்து விசாரித்தபோது, மின்குமிழ்கள் சேதமடைந்துள்ளதனாலேயே இவை எரிவதில்லை என காரணம் கூறப்படுகிறது. எனவே, உரியவர்கள் உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவன செய்யப்பட வேண்டும்".
ஐ.தே.க. உறுப்பினர் எஸ்.நாகராஜ் பேசுகையில்;
"பிரதேச சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டும் பிரச்சினைகள் குறித்து யாரும் அக்கறை கொள்வதில்லை. அரசாங்கமோ, மாகாண சபைகளோ இவர்களை கண்டுகொள்வதில்லை" எனக் கூறினார்.
ஐ.ம.சு. கூட்டமைப்பு உறுப்பினர் கே.ஏ.தர்மசேன பேசுகையில்;
"கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்ட இறக்குவானை ஆயுர்வேத வைத்தியசாலை உரிய கவனிப்பின்றி அவை செயலிழந்த நிலையில் உள்ளன.
அதனை உரியமுறையில் பராமரித்து மக்கள் பயனடையும் வகையில் அது மீண்டும் திறந்துவைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றேன்" என்றார்.
இங்கு உறுப்பினர்களான தர்மசேன இசும்புல, உபசேன ஹெட்டியாராச்சி, தர்மசிறி, ஜகத் பள்ளியக்குரு உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.