சித்திரைப் புத்தாண்டிற்கு சென்று கொண்டிருந்தவர்களின் வாகனம் வீதியை விட்டு விலகி சுமார் இருநூறு அடி பள்ளத்தில் வீழ்ந்து குடை சாய்ந்ததில் 14 பேர் படுகாயமடைந்து பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவர் மரணமானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து சனிக் கிழமை பதுளை - பசறை வீதியின் ஐந்தாம் மைல் கல்லருகே இடம்பெற்றுள்ளது.
பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் மூவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரும் கொழும்பு வர்த்தக நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் தொழில் செய்யும் பசறைப் பகுதியின் மடுல்சீமை, கொக்காகலை தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களாவர்.
இவர்கள் அனைவரும் தமது பெற்றோர், உறவினர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடு முகமாக கொழும்பிலிருந்து பசறைப் பகுதிக்கு வான் ஒன்றில் வந்து கொண்டிருந்த போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.